பல விவகாரங்களில் மலேசிய வழக்குரைஞர் மன்றம் நடந்துகொண்ட விதத்தில் வெறுப்புற்ற வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து வழக்குரைஞர்களுக்குப் புதிய அமைப்பாக வழக்குரைஞர் சங்கம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அச்சங்கம் குறித்து த ஸ்டார் நாளேட்டிடம் பேசிய அதன் நிறுவனர் நோர்டின் யூசுப், சங்கப் பதிவகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அது, வழக்குரைஞர் மன்றத்துக்கு மாற்றாக அமைக்கப்படவில்லை என்றும் வழக்குரைஞர்களின் உரிமைகளையும் நலன்களையும் கவனித்துக்கொள்ளவே அமைக்கப்பட்டது என்றும் சொன்னார்.
“அதில் சட்டத்தில் பட்டம் பெற்ற எவரும் உறுப்பினராகலாம். வழக்குரைஞர் தொழில் செய்வோர் மட்டும்தான் சேர முடியும் என்பதில்லை.
“கல்வியாளர்கள் சிலரும் சட்ட ஆலோசகர்களும் வந்துள்ளனர். சட்டத்தில் பட்டம் பெற்ற அமைச்சர்கள் சிலரும் விண்ணப்பப் பாரம் கேட்டு வந்தார்கள்”. இதுவரை 100 உறுப்பினர்கள் அதில் இருப்பதாக நோர்டின் த ஸ்டாரிடம் கூறினார்.
“வழக்குரைஞர் மன்றத்தால் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்ட வழக்குரைஞர்களுக்கு சங்கம் உதவும்”, என்றும் அவர் தெரிவித்தார்.
அச்சங்கம், வழக்குரைஞர் தொழில் புரிய சான்றிதழ் வைத்துள்ள சட்டம் பயின்ற எவரும் இயல்பாகவே மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர் ஆவார்கள் என்று கூறும் 1976ஆம் ஆண்டு வழக்குரைஞர் தொழில் சட்டத்தின் 43ஆம் பகுதியைத் திருத்துவதற்கு முயலும்.
“வழக்குரைஞர் மன்றத்தில் உறுப்பினர் ஆவதும் ஆகாததும் தனிப்பட்ட வழக்குரைஞரின் விருப்பத்தைப் பொறுத்ததாக இருத்தல் வேண்டும்.
“இயல்பான உறுப்பியம், கட்டாய உறுப்பியம் என்பதெல்லாம் கூடாது”, என்று நோர்டின் கூறினார்.
இதற்குமுன் அரசாங்கம் சட்டம் பயின்றோருக்காக சட்டக் கழகம் அமைக்கப்போவதாக முன்மொழிந்ததற்கும் இதற்கும் தொடர்புண்டா என்று தெரியவில்லை.
வழக்குரைஞர் மன்றத்தில் அதிகாரமீறல்
அப்படி ஒரு கழகம் அமைக்கப்படுவதற்கு வழக்குரைஞர் மன்றம் எதிர்ப்புத் தெரிவித்தது.அது மன்றத்தின் பணிகளைப் பறித்துக்கொள்ளும் என அது கூறிற்று.
சில ஆண்டுகளாகவே அரசாங்கத்துக்கும் வழக்குரைஞர் மன்றத்துக்குமிடையில் முட்டல் மோதல்கள் நிகழ்ந்து வந்துள்ளன. 2012 அமைதிப் பேரணிச் சட்டம், 1950ஆம் ஆண்டு ஆதாரச் சட்டத்தில் 114ஏ என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டது, தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டது போன்ற விவகாரங்களுக்கு எதிராக மன்றம் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வந்துள்ளது.
இன்னொரு ஆங்கில நாளேடான நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், வழக்குரைஞர் மன்றத்தின் ஒழுங்கு வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்னைகளின் விளைவாகத்தான் வழக்குரைஞர் சங்கம் அமைக்கும் முடிவெடுக்கப்பட்டதாக நோர்டினை மேற்கோள் காட்டிக் கூறியது.
“வழக்குரைஞர் மன்றத்தின் ஒழுங்கு வாரியத்தில் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களுக்காக அமைக்கப்பட்டதுதான் வழக்குரைஞர் சங்கம் என்று கூறிய நோர்டின் வழக்குரைஞர் மன்றம் வழக்குரைஞர்களைப் பாதுகாப்பதற்கு மாறாக அவர்களைத் தண்டித்து வந்திருக்கிறது என்றார்.
“ஒழுங்கு வாரியத்தின் முடிவுகள் குறித்து கேள்வி கேட்க முடியாது. இது நியாயமில்லை என்று நினைக்கிறேன். வழக்குரைஞர்களாகிய எங்களின் உரிமை எங்கே?”, என்று வினவினார்.
இச்சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்றும் நோர்டின் கூறினார்.