‘சுஹாக்காம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும்’

சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் வழங்கும் ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு அரசங்கத்துக்கு சமூக அமைப்புக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கடந்த 12 ஆண்டுகளாக சுஹாக்காம் இயங்கி வருகிறது. ஆனால் ஒரு முறை கூட அதன் ஆண்டறிக்கைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதில்லை.

அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இந்த மனித உரிமை விஷயங்களைக் காட்டிலும் “அரசியலுக்கும் அதிகாரத்துக்கும்’ மட்டுமே அக்கறை காட்டுவதாகத் தோன்றுகிறது என எரா மலேசிய பயனீட்டாளர் அமைப்புத் தலைமை நிர்வாக அதிகாரி என் மாரிமுத்து கூறினார்.

சுஹாக்காம் அறிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவது, மனித உரிமைகள் மலேசிய அரசியல்வாதிகள் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்றார் அவர்.

அவர் கடந்த திங்கட்கிழமையன்று பினாங்கில் “10 ஆண்டுகளுக்குப் பின்னர் சுஹாக்காம்: ஆணையம் குறித்த ஒர் ஆய்வு” என்னும் தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

அந்த நிகழ்வில் www.seahrw.org என்ற எரா பயனீட்டாளர் மனித உரிமை இணையத் தளமும் அறிமுகம் செய்யப்பட்டது.

அந்த நிகழ்வில் சுஹாக்காம் ஆணையாளர் முகமட் ஷானி அப்துல்லாவும் பேசினார். அரசாங்கம் சுஹாக்காமைக் கண்டு அஞ்சக் கூடாது என்றார் அவர். எந்த நாட்டிலும் மனித உரிமை அமைப்புக்கள் பகுதி நீதி பரிபாலன அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அவற்றுக்கு அமலாக்க அதிகாரங்கள் கொடுக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்வது போலீஸ் போன்ற மற்ற அமைப்புக்களின் கடமைகளை அவை எடுத்துக் கொண்டது போலாகி விடும் என ஷானி குறிப்பிட்டார்.

வாக்காளர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மனித உரிமைகளை மேம்படுத்துவதோடு ஆதரவும் அளிக்க வேண்டும் எனக் கோர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் கட்சிகள் அடிப்படையில் அல்லாமல் வேட்பாளர்கள் அடிப்படையில் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்றார் அவர்.