ஸ்கார்ப்பின் விசாரணை தொடருகிறது என்கிறார் பிரஞ்சு வழக்குரைஞர் போர்டோன்

மலேசியாவுக்கு இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் விற்கப்பட்டதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர் ஒருவரை பாரிஸில் உள்ள நீதிமன்றத்தில் அந்த வழக்கைச் சமர்பித்துள்ள வழக்குரைஞர் சாடியுள்ளார்.

பிரான்ஸுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய அந்தக் கொள்முதல் மீதான வழக்கிற்கு நியமிக்கப்பட்ட இரண்டு பிரஞ்சு நீதிபதிகள் இன்னும் தங்கள் புலனாய்வுகளைத் தொடருவதாக பாரிஸைத் தளமாகக் கொண்ட பிரபலமான மனித உரிமை வழக்குரைஞர் வில்லியம் போர்டோன் கூறினார்.

“2012ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சுவாராம் (மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பு) ஒரு சிவில் தரப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விவகாரம் மீது  The Tribunal deGrande கிரிமினல் விசாரணையைத் தொடங்கியுள்ளது,” என போர்டோன் சொன்னார்.

அந்த விசாரணை முடிந்த பின்னர் புலனாய்வு நீதிபதிகள் அந்த வழக்கு முழு விசாரணைக்குச் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வழக்கு மீது ‘வழக்கு விசாரணை’ ஏதுமில்லை என பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர் வெஸ் சார்ப்னெல் அறிக்கை விடுத்துள்ளது ‘முற்றிலும் முரணானது’ என போர்டோன் வருணித்தார்.

“ஏனெனில் புலனாய்வு முடிவில் முழு விசாரணையை நடத்துவதா இல்லையா என்பதை  முடிவு செய்யப் போவது நீதிபதிகளே தவிர அரசாங்க வழக்குரைஞர் அல்ல.”

“எங்களுக்குத் தெரிந்த வரையில் அந்த வழக்குக்குப் பொறுப்பான அரசாங்க வழக்குரைஞர்கள் யாரும் சார்பெனல் கூறியது போல அறிக்கை விடுக்கவில்லை,” என பிரபலமான அந்த பிரஞ்சு வழக்குரைஞர் தெரிவித்தார்.

“ஸ்கார்ப்பின் விசாரணை மீது தங்கள் புலனாய்வுகளை Roger Le Loire, Serge Tournaire என்னும் இரண்டு நீதிபதிகளும் இன்னும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.”

மலேசிய ஊடகங்கள் உண்மைக்கும் வதந்திகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் புலனய்வுகளுக்கும்வழக்கு விசாரணைக்கும் இடையிலான வேறுபாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும் என சார்பெனல் என்ற அந்த அரசாங்க வழக்குரைஞர் சொன்னதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

“அந்த விவகாரம் மீது சில மலேசிய ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள குழப்பத்தை நான் அறிவேன். அது ஊடகங்கள் நடத்தும் வழக்கு விசாரணை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று தான் நான் சொல்வேன்,” என அவர் நேற்று பெர்னாமாவுக்கு கோலாலம்பூரில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

பிரான்ஸில் வழக்கு தொடுப்பு அலுவலகத்தின் முன்னாள் தலைவரான Charpenel இப்போது அரசாங்க வழக்குரைஞராக பணி புரிகிறார். ஊழல் தடுப்பு அமைப்புக்களுக்கான அனைத்துலக சங்கத்தில் நிர்வாக உறுப்பினரான அவர் அந்தச் சங்கத்தின் நான்கு நாள் மாநாட்டிலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் வந்திருந்தார்.

சுவாராம்: உண்மைகளை திசை திருப்ப வேண்டிய தேவை இல்லை

இதனிடையே ஸ்கார்ப்பின் விவகாரம் பிரான்ஸ் மேற்கொள்ளும் கிரிமினல் புலனாய்வு என்றும் அது இன்னும் வழக்கு விசாரணைக்குப் போகவில்லை என்றும் தமது குழு எப்போதும் வலியுறுத்து வந்துள்ளதாக சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் தெரிவித்துள்ளார்.

அந்த விசாரணையில் ஒரு  தரப்பாக இவ்வாண்டு மார்ச் மாதம் சுவாராம் எற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

“ஆகவே உண்மையை திசை திருப்புவதும் தில்லுமுல்லு செய்வதும் அந்த விவகாரத்தில் உண்மைகளைக் கண்டு பிடிப்பதற்கு எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அந்த நீர்மூழ்கிப் பேரத்தின் தொடர்பில் பிரஞ்சுத் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்எஸ் மலேசிய அதிகாரிகளுக்குத் தரகுப் பணம் கொடுத்ததாக 2009ம் ஆண்டு சுவாராம் புகார் செய்தது.