ஜோகூரில் பெங்கேராங் கடற்கரைக்கப்பால் மீன்கள் பெரும் எண்ணிக்கையில் இறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதிவாழ் மக்கள் கவலைகொண்டு அதற்கான காரணத்தைக் கண்டறியுமாறு மீன்வளத் துறையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், கடலில் மீன்கள் நிறைய இறந்து கிடப்பதைக் கண்ட கம்போங் சுங்கை புந்து மீனவர்கள் தம்மைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர் என பெங்கேராங் என்ஜிஓ-கள் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஒங் தியான் ஹுவா ஓர் அறிக்கையில் கூறினார்.
கடற்கரை சென்று பார்த்த ஒங், இறந்த மீன்களில் பெரும்பகுதி அலைகளால் அடித்துவரப்பட்டு கடற்கரை நெடுகிலும் சிதறிக் கிடப்பதைக் கண்டார். அங்கு ஒரு நாயும் இறந்து கிடந்தது.
அக்காட்சியை “வழக்கத்துக்கு மாறானது” என்று வருணித்த ஒங், இறந்த மீன்களைச் சாப்பிட்டதால் நாய் இறந்திருக்கலாம் என்று அங்கு வசிப்பவர்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
“2010-இல் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது இப்படித்தான் மீன்கள் இறந்து கிடந்தன. ஆனால், இது இன்னும் மோசமானதாகத் தெரிகிறது”, என்றார்.

























