வெளிநாட்டிலிருந்து வாக்களித்தல்: மற்ற நாடுகளில் விதிமுறைகள் இன்னும் கடுமையானவை

வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற  ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது மலேசியா வந்து போக வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருப்பதை அரசாங்கம் தற்காத்துப் பேசியுள்ளது.

மற்ற நாடுகளிலும் இதேபோன்ற விதிமுறைகள் உண்டு என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த பிரதமர்துறை துணை அமைச்சர் லியு வுய் கியோங் (இடம்) அவற்றின் விதிமுறைகள் இன்னும் கடுமையானவை என்றார்.

“சிங்கப்பூரில், தேர்தலுக்கு முந்திய மூன்றாண்டுகளில் குறைந்தது 30 நாள்களாவது சிங்கப்பூரில் இருந்திருக்க வேண்டும்.

“தேர்தல் எப்போது என்பதே தெரியாது, ஆனாலும் அதற்குமுன் அங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது எவ்வளவு கடுமையானது”.

வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு நிபந்தனைகள் போடுவது அரசமைப்புக்கு முரணாக இருக்கிறதே என்று வினவியிருந்த அந்தோனி லோக் (டிஏபி-ராசா)கின் கேள்விக்குப் பதிலளித்தபோது லியு இவ்வாறு கூறினார்.

ஆஸ்திரேலியாவில், குடிமக்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நாடு திரும்பியிருக்க வேண்டும். அப்போதுதான் வாக்களிக்க முடியும்.

“தாய்லாந்தில், வெளிநாட்டில் வசிக்கும் குடிமக்கள் மூன்று மாதங்களாவது அவர்களின் தொகுதிக்குத் திரும்பி வந்து தங்கியிருக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் தங்களை வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளராக பதிவு செய்துகொண்டிருக்க வேண்டும்.

“அமெரிக்காவைப் பொறுத்தவரை வெளிநாட்டில் உள்ள வாக்காளராக பதிவு செய்திருக்க வேண்டும், வருமான வரியை முறைப்படி செலுத்தியிருக்க வேண்டும், வெளிநாட்டு முகவரியை ஆண்டுக்கு ஆண்டு இற்றைப்படுத்தி வரவேண்டும்”, என்றார்.

ஆனால், மலேசியர்கள் வெளிநாட்டிலிருந்தபடி வாக்களிக்கும் தகுதிபெற ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது நாடு திரும்பிவர வேண்டும் என்ற நிபந்தனை ஒரு பரிந்துரை மட்டுமே என்பதை லியு வலியுறுத்தினார்.

“அதைத் தேர்தல் ஆணையம் (இசி) முன்மொழிந்தது….இன்னமும் பரிசீலனையில் உள்ளது”, என்றார்.

லியு இன்னொரு தகவலையும் தெரிவித்தார். இவ்வாண்டு அக்டோபர் 16-இல் அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கும் இரண்டாம் காலாண்டு வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர் எண்ணிக்கை 13,052,274.