வீட்டுக்கடன் குறித்து கியூபெக்ஸ் வங்கிகளுடன் பேச்சு நடத்தும்

அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸ், அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன்கள் வழங்க அரசாங்கத்தால் அமர்த்தப்படும் நிதி நிறுவனங்களுடன் விரிவான பேச்சுகள் நடத்தத் திட்டமிடுகிறது.

பேச்சுகள் அரசு ஊழிர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைந்திருக்கும் என கியூபெக்ஸ் தலைமைச் செயலாளர் லொக் இம் பெங்  ஓர் அறிக்கையில் கூறினார்.

“நிதி நிறுவனங்கள் கடுமையான வீட்டுக்கடன் நிபந்தனைகளை விதிக்கக்கூடும் என்றும் ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடும் என்றும் அரசு ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

“இதற்குமுன் வீட்டுக்கடன்களை அரசாங்கமே நிர்வகித்துக்கொண்டிருந்தபோது அதன் ஊழியர்களின்  நலனுக்கு முக்கியத்துவம் அளித்து வீடு வாங்குவது அவர்களுக்குச் சுமையாக இல்லாதபடி பார்த்துக்கொண்டது”, என்று லொக் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.

அரசாங்கம், 2013 பட்ஜெட்டில், வீட்டுக் கடனளிப்புப் பிரிவால் கவனித்துக்கொள்ளப்படும் அரசாங்க ஊழியர் வீட்டுக்கடன் திட்டத்தை நிதி நிறுவனங்களிடம் மாற்றி விடுவது பற்றி ஆலோசிக்கப்படுவதாகக் கூறியிருந்தது.

நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மட் செரிகார் அப்துல்லாவும் அரசாங்க ஊழியர்களுக்கு வீட்டுக்கடன் வழங்குவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க நாட்டின் மிகப் பெரிய வங்கிகள் நான்கு முன்வந்திருப்பதாக கூறினார்.

-பெர்னாமா