பெங்கெராங் மீது அதிகாரத்துவ பக்காத்தான் நிலை இன்னும் முடிவாகவில்லை

ஜோகூரில் பக்காத்தான் ஆட்சியைப் பிடிக்குமானால் பெங்கெராங்கில் ரபிட் என்ற சுத்திகரிப்பு பெட்ரோல் ரசாயன ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்தை முடக்குவதா இல்லையா என்பது மீது பக்காத்தான் ராக்யாட் இன்னும் பொதுவான நிலையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

இவ்வாறு ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங் கூறுகிறார். அந்த விஷயம் கூட்டணியின் நிலையை ‘துல்லிதமாக்குவதற்கு’ பக்காத்தான் விரைவில் கூடும் என அவர் சொன்னார்.

நாங்கள் அந்த விவகாரம் மீது நட்புறவான ரீதியில் கலந்து பேசுவோம். நாங்கள் அனைவரும் ஒரே பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.

அந்த திட்டத்தை தாம் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட 10 கிராம மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என நேற்று பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப் கூறியிருந்தார்.

அதுதான் பக்காத்தான் நிலையா என தொடர்ந்து வினவப்பட்ட போது “ஜோகூரில் அந்தத் திட்டம்  வேண்டும் என பக்காத்தான் தலைவர்களிடையே விருப்பம் இருப்பதாக நான் உணருகிறேன். ஆனால் அது பாரம்பரியக் கிராமங்களை பாதிக்கக் கூடாது. அதன் அடிப்படையில் எங்களிடையே வேறுபாடு கிடையாது. வலுவான இணக்கம் காணப்படுகின்றது,” என சலாஹுடின் பதில் அளித்தார்.

என்றாலும் அந்தத் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்பதே ஜோகூர் பிகேஆர் கருத்து என சுவா தெரிவித்தார்.

“இது என்னுடைய நிலை அல்ல. கட்சியின் அரசியல் பிரிவு அந்த முடிவை எடுத்தது,” என்றார் அவர்.

“நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி விட்டதால் அந்தத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அரசாங்கம் ஏற்கனவே இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க முன் வந்து விட்டது. கிராம மக்களுக்கு வேறு வழி இல்லை.”

என்றாலும் அந்தத் திட்டத்துக்காக கிராம நிலத்தை கையகப்படுத்துவது மீது பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் ஒரே மாதிரியான கவலையைக் கொண்டுள்ளதாக சுவா தெரிவித்தார்.

ஜோகூர் டிஏபி அந்தத் திட்டத்தை எதிர்க்கிறது

அந்தத் திட்டத்தை டிஏபி ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறிய ஜோகூர் மாநில டிஏபி தலைவர் பூ செங் ஹாவ், அந்த விஷயம் முடிவு செய்வது குடியிருப்பாளர்களைப் பொறுத்தது என்றார்.

அந்தத் திட்டத்தை மூடுவதால் ஏற்படும் விளைவுகளை டிஏபி இன்னும் சிந்திக்கவில்லை என அவர் சொன்னார். என்றாலும் அந்த பெருந்திட்டம் அமலாக்கப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளை மக்கள் சமாளிப்பதில் அது கவனம் செலுத்துகிறது என அவர் தெரிவித்தார்.

“ஏனெனில் அந்தக் கிராம மக்களில் பெரும்பாலோர் பாரம்பரிய வாழ்வாதார முறைகளைச் சார்ந்துள்ளனர். அந்த தொழில் கூடம் அவற்றை அழித்து விடும். அந்தத் திட்டம் உள்ளூர் மக்களுக்கு எவ்வளவு நன்மைகளைக் கொண்டு வரும் என்பது இன்னும் தெரியவில்லை,” என்றார் பூ.

அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணி ஒன்று கடந்த செப்டம்பர் 30ம் தேதி பெங்கெராங்கில் மூவாயிரம் பேர்களுடன் பேரணி ஒன்றை நடத்தியது.