நாட்டில் விதைநெல் விநியோகிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றுக்கு அண்மையில் அரசாங்கக் குத்தகை கிடைத்தது. டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த தகுதிகள் அதனிடம் இல்லை என்றாலும் அதற்குக் குத்தகை கொடுக்கப்பட்டதைப் பல தரப்புகள் குறைகூறின. ஆனால், அந்நிறுவனம் அந்தக் குறைகூறல்களை ஒதுக்கித் தள்ளியது.
அந்தக் குத்தகை பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த மற்ற நிறுவங்களிடமும் டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த தகுதிகள் முழுமையாக இல்லை என்று ஹாஜி முகம்மட் நோர் பின் ஹாஜி அப்துல் ரஹ்மா சென்.பெர்ஹாட்(எச்எம்என்)டின் நிர்வாகி மன்சூர் முகம்மட் நோர் கூறினார்.
அந்தக் குத்தகைக்கு விண்ணப்பம் செய்யும் நிறுவனங்கள் சொந்தமாக ஆலைகள் வைத்திருக்க வேண்டும் என்பது நிபந்தனைகளில் ஒன்று. அது அந்த நிறுவனத்திடம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியதற்கு எச்எம்என் வைத்துள்ள இரண்டு ஆலைகளில் ஒன்று அரசு நிறுவனமான மூடா விவசாய மேம்பாட்டு வாரியத்திடமிருந்து ஒத்திக்குப் பெறப்பட்டது என்றார்.
“மோசமான நிலையில் (சிலாங்கூர், சுங்கை பூரோங்கில்) இருந்தது அந்த ஆலை. அதைப் பழுதுபார்த்து அதிகாரிகள் எதிர்பார்க்கும் தகுதிகளுக்கு ஏற்ப திருத்தி அமைத்தோம்”, என்றார்.
எச்எம்என் நிறுவனம், 2013-இலிருந்து 2014வரை 20,000 டன் விதைநெல் வழங்கும் குத்தகையை விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சிடமிருந்து பெற்றிருக்கிறது.
கடந்த வாரம் பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார், நாடாளுமன்றத்தில் கடிதம் ஒன்றைக் காண்பித்து அது, நிதி அமைச்சு விவசாய அமைச்சுக்கு அனுப்பிய கடிதம் என்றவர் குறிப்பிட்டார்.
அக்கடிதம் விதைநெல் விநியோகிக்கும் குத்தகைகள் டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்றிராத நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியது.
‘மக்கள் புகார் செய்ததில்லை’
அது பற்றிக் கருத்துரைத்த மன்சூர், 1992-இல் அமைக்கப்பட்ட எச்எம்என், இத்தொழிலில் ஒரு முன்னோடி நிறுவனம் என்றும் மாபுஸ் விவரம் அறியாமல் பேசுகிறார் என்றும் கூறினார்.
“குறை சொல்லும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள். மக்கள் இதுவரை புகார் செய்ததில்லை. நெல்விதைகளை வழங்கும் ஆற்றல் எங்களுக்கு உண்டு என்பதை நிரூபித்து வந்திருக்கிறோம்”, என்றாரவர்..
விதைநெல் விநியோகிக்கும் குத்தகையைப் பெற்றுள்ள எம்எம்என், ஸ்ரீ மெர்போக் ஆகிய நிறுவனங்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமாருக்கு மிகவும் வேண்டியவர்களுக்குச் சொந்தமானவை என்றும் அதனால்தான் அவற்றுக்கு அக்குத்தகைகள் கிடைத்தன என்றும் ‘விவசாய அமைச்சைச் சேர்ந்தவன்’ என்று தன்னைக் கூறிக்கொண்ட ஒருவர் கட்டுரை எழுதியதை அடுத்து இவ்விவகாரம் கடந்த ஒரு மாதமாக இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதனை மறுத்த மன்சூர் விவசாய அதிகாரிகள் விதித்த மற்ற தகுதிகள் நிறுவனத்துக்கு உண்டு என்றார்.