நாடாளுமன்ற ‘வசதிகளை’க் கண்டு சமூக ஆர்வலர் அதிர்ச்சி

‘ஜாலான் சுல்தானைக் காப்போம்’ இயக்கத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் ஒருவர், நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிப்பதில் ஈடுபடும் செய்தியாளர்கள் “நல்ல பணியிட வசதிகள் கோரி மறியல்” செய்வதை ஊக்குவிக்கிறார்.

மகஜர் ஒன்றைக் கொடுப்பதற்காக நாடாளுமன்றம் சென்ற பாரம்பரிய சொத்துகளைக் காக்கும் சங்கத்தின் தலைவர் இஷாக் சூரின் செய்தியாளர் கூட்டங்களில் செய்தி சேகரிக்கும் நிருபர்கள் தரையில் அமர வேண்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

“நாங்கள் (சமூக ஆர்வலர்கள்) நாற்காலிகளில் அமர்ந்திருப்பதும் செய்தியாளர்கள் தரையில் அமர்ந்திருப்பதும் சரியல்ல”, என்றார்.

நாடாளுமன்றம் அவர்களுக்கு நாற்காலிகள் வழங்க வேண்டும் என்று கூறிய அவர், செய்தியாளர்கள் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசிடம் அதற்குக் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றார்.

“அதற்காக நீங்கள் ஒரு மறியல் நடத்தினால், அதில் நானும் வந்து கலந்துகொள்வேன்”, என்று புன்னகையுடன் கூறினார்.

நாடாளுமன்றத்தைப் புதுப்பிக்கும் வேலை நடப்பதால் மக்களவை தற்காலிகமாக அருகில் உள்ள வேறொரு இடத்தில் செயல்படுகிறது.

அதனால் செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து செய்தி சேகரிப்புப் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது.  அது பற்றி அவர்கள் நஸ்ரியிடம் முறையிட்டதை அடுத்து மக்களவையில் இப்போது அவர்களுக்கு மேசை நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

ஆனால், செய்தியாளர் கூட்டம் நடைபெறும் இடம் சிறியது என்பதால் அங்கு செய்தியாளர்களுக்கு மேசை நாற்காலி போடுவதற்கு இடமில்லை. தரையில் அமர்ந்துதான் செய்தியாளர் கூட்டக் குறிப்புகளை எழுத வேண்டியுள்ளது.