நஷாருடினின் குற்றச்சாட்டு தீய நோக்கம் கொண்டது

2011 சரவாக் மாநிலத் தேர்தலுக்குப் பின் நடைபெற்ற நன்றிநவிலும் நிகழ்வில் கிறிஸ்துவ அரசு அமைய பிரார்த்தனை செய்யப்பட்டதாக பாஸ் தலைவர் ஒருவர் கூறியிருப்பதை சரவாக் டிஏபி மறுத்துள்ளது.

“அக்கூற்றில் உண்மையில்லை, அது தீய நோக்கம் கொண்டது, பொறுப்பற்றது”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சரவாக் டிஏபி தலைவர் வொங் ஹோ லெங் சாடினார்.

அது தேர்தல் வேலைகளைச் செய்த கட்சித் தொண்டர்களுக்கு நடைபெற்ற ஒரு விருந்து நிகழ்ச்சி என்றும் அதில் பிரார்த்தனைக் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

அதில், கட்சித் தொண்டர்களுடன் மாநில பிகேஆர் தலைவர்களும் பாஸ் தலைவர்களும் கலந்துகொண்டார்கள். கலந்து கொண்டவர்களுக்குத் தெரியும் அங்கு பிரார்த்தனைக் கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்பது.

இதன் தொடர்பில் கட்சி போலீஸில் புகார் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

சரவாக் டிஏபி செயலாளர் சொங் சியான் ஜியன்,  பாஸ் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசாவின் கூற்றைக் கட்சி கடுமையானதாகக் கருதுகிறது என்றார். ஆனாலும், பக்காத்தான் ரக்யாட் அளவில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் கட்சி ஈடுபடாது என்றாரவர்.

“முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் பொறுப்பை பாஸ் கட்சியிடமே விட்டு விடுகிறோம்”, என்றார்.

நேற்று கோலாலும்பூரில் புத்ரா உலக வணிக மையத்தில் தேசிய இஸ்லாமிய பிரச்சார இயக்க ஆயவரங்கில் அறிக்கை ஒன்றைப் படைத்தபோது நஷாருடின் கூறியதற்கு எதிர்வினையாகத்தான் டிஏபி தலைவர்கள் மேற்கண்டவாறு கருத்துரைத்தனர்.

சரவாக் மாநிலத் தேர்தல் முடிந்ததும் டிஏபி அதன் வெற்றியைக் கொண்டாட ஒரு விருந்து நடத்தியதாகவும் அதில் மற்றவற்றோடு மலேசியாவில் ஒரு கிறிஸ்துவ அரசாங்கம் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டதாகவும் நஷாருடின் கூறினார்.

“பெரிய வெற்றி கிடைத்ததால், மலேசியாவில் கிறிஸ்துவ அரசாங்கம் அமைய வேண்டிக்கொண்டார்கள்”, என்றார்.