ஷாரிசாட்: ஃபீட்லோட் மையம் மீதான கணக்கறிக்கையின் குறிப்பு கண்டு நான் வெட்கப்பட வேண்டியதில்லை

முன்னாள் அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை நேசனல் ஃபீட்லோட் மையத்தின் பிரச்னைகளைக் கவனத்துக்குக் கொண்டபோது அது எவ்விதத்திலும் தமக்கு சங்கடத்தை உண்டு பண்ணவில்லை என்றார்.

பிகேஆர் தலைவர்கள் இருவருக்கு எதிராக அவர் தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில், இன்று வழக்குரைஞர் ரஞ்சிட் சிங்கால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோது, கிம்மாஸில் உள்ள மையமும் நேசனல் பீட்லோட் கார்ப்பரேசனும்(என்எப்சி) தனித் தனியானவை என்றார்.

“கணக்கறிக்கை மையத்தைப் பற்றித்தான் பேசுகிறதே தவிர, நிறுவனத்தைப் பற்றி அல்ல.தலைமைக் கணக்காய்வாளர் தனியார் நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில்லை”, என்றவர் சொன்னார்.

இதற்குமுன் ஷாரிசாட் தம் கணவர் ஃபீட்லோட் குத்தகையைப் பெற விண்ணப்பம் செய்தது தமக்குத் தெரியாது என்றே கூறி வந்திருக்கிறார்.

ஆனால், இப்போது தெரியும் என்கிறார். ஆனால், விவரங்கள் முழுமையாக தெரியாது என்கிறார்.

ஷாரிசாட் தொடுத்துள்ள இவ்வழக்கில் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியும் பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடினும் எதிர்வாதிகளாவர். ரபிஸியின் வழக்குரைஞர் ரஞ்சிட் சிங் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு ஷாரிசாட் அளித்த பதில்களும்:

ரஞ்சிட்: அத்திட்டம் மாட்டிறைச்சியில் சுய-தேவையைப் பூர்த்திசெய்யும் இலக்கை அடையாத பட்சத்தில் அது தோல்வியுற்றதாகக் கருதப்படும் என்று சொன்னால் அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?

ஷாரிசாட்: இல்லை. ஒப்புக்கொள்ள மாட்டேன்.

ரஞ்சிட்: அத்திட்டம் தோல்வியுற்றால், அறிக்கையில் கூறியுள்ளபடி கிராப்புறங்களில் துணை பண்ணைகளை நிறுவ முடியாது போகும்…

ஷாரிசாட்: ஆமாம்.

ரஞ்சிட்: அம்மையம் தோல்வியுற்றால் என்எப்சி கடனை (அரசாங்கத்தின் ரிம250 மில்லியன் கடனை)த் திருப்பிச் செலுத்துவது பாதிப்புறும் என்பதை ஒப்புக்கொள்வீர்களா?

ஷாரிசாட்: மாட்டேன். அவர்களுக்கு வேறு திட்டம் இருக்கலாம். அத்துடன் இக்கேள்வியை என்எப்சி-இடம்தான் கேட்க வேண்டும்.

TAGS: