ஹூடூட் அமலாக்கத்தை ஆராய்க: வழக்குரைஞர் மன்றத்திடம் மசீச கோரிக்கை

ஹூடூட் சட்டத்தின் அமலாக்கம் பற்றியும் அதனால் முஸ்லிம்- அல்லாதாருக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்பட அதன் விளைவுகள் பற்றியும் தீர ஆராய வேண்டும் என்று மசீச வழக்குரைஞர் மன்றத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அதன் தொடர்பில் மசீச சட்ட விவகாரப் பிரிவு வழக்குரைஞர் மன்றத்துக்குக் கடிதம் அனுப்பியிருப்பதாக அதன் தலைவர் தே புவாய் சுவான் கூறினார்.

“மலேசியர்கள் அவ்விவகாரத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள நியாயமான, பாகுபாடற்ற ஆய்வறிக்கை ஒன்று தேவை”, என்றாரவர்.

முஸ்லிம்களுக்கு ஒன்றும் முஸ்லில்-அல்லாதாருக்கு ஒன்றுமாக இரண்டு குற்றவியல் சட்டங்கள் இருப்பது குறித்து மசீச “கவலையுறுவதாக” அவர் சொன்னார்.

“முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் முஸ்லிம்-அல்லாதாரும் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் என்னவென்பதைச் சட்ட நிபுணர்கள் ஆராய்வது பொதுநலனுக்கு உகந்த ஒன்று என மசீச நினைக்கிறது”, என்றாரவர்.