அம்னோ எம்பியின் சிறைத்தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

சாபா பெர்ணாம் எம்பி அப்துல் ரஹ்மான் பக்ரிக்கும் அவரின் உதவியாளர் ரோஸ்லி புஸ்ரோவுக்கும் ஊழல் குற்றதுக்காக விதிக்கப்பட்ட ஆறாண்டுச் சிறைத் தண்டனையையும் ரிம400,000 அபராதத்தையும் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

தண்டனையைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி அஹ்தார் தாஹிர், தண்டனை உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

எனினும் தண்டனையைத் தள்ளிவைக்க அப்துல் ரஹ்மானின் வழக்குரைஞர் எழுத்துப்பூர்வமாக மனுச் செய்துகொள்வார் என்று தெரிகிறது.

அப்துல் ரஹ்மானும் ரோஸ்லியும் நடக்காத நிகழ்வுகளை நடந்ததாக பொய் சொல்லி அவற்றுக்காக ரிம80,000 கோரிக்கை விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர்களுக்கு செஷன்ஸ் நீதிபதி அஜனிஸ் தே அஸ்மான் தே மார்ச் முதல் நாள் அந்தத் தண்டனையை விதித்திருந்தார்.

அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிகேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகியபோதுதான் உயர்நீதிமன்றம் முறையீட்டுக்கு அனுமதி வழங்க மறுத்ததுடன் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிலைநிறுத்தியது.

2008-க்குமுன் அப்துல் ரஹ்மான் சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அக்குற்றத்தைப் புரிந்தார் என்று கூறப்பட்டது. அவருக்கு ரோஸ்லி உடந்தையாக இருந்துள்ளார்.