மக்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பல அன்பளிப்புகளுடன், நாட்டின் 2013-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இவ்வாண்டு வழங்கப்பட்ட 500 ரிங்கிட் தொகையை அரசாங்கம் அடுத்த ஆண்டும் வழங்கும் எனவும், 2,000 ரிங்கிட் அல்லது அதற்குக் குறைவாக மாதம் ஒன்றுக்கு வருமானத்தைக் கொண்டுள்ள திருமணமாகாத 21 வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு 250 ரிங்கிட் கொடுக்கப்படும் எனவும் 2013-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல செலவுகளை நஜிப் அறிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தல் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கடந்த 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்து வரும் அவரது பாரிசான் நேசனலுக்கான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர், 2013-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளார் என்பது பலரினதும் கருத்து.
மக்களுக்குப் பண உதவி செய்வது தவறல்ல; அது எப்போதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஒரு தடவை அல்லது இரண்டு தடவை ரிம 500 அல்லது ரிம 1,000 கொடுப்பது அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது என 2013 வரவுசெலவுத் திட்டம் குறித்து செம்பருத்தி.கொம் மேற்கொண்ட நேர்காணலில் கலந்துகொண்டவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
கோலாலம்பூரின் பிரிக்பில்ட்ஸ், பசார் செனி, கேஎல் சென்டர், லெவோ அம்பாங், செந்துல் மற்றும் கிள்ளான் போன்ற பகுதிகளில் செம்பருத்தி.கொம் மேற்கொண்ட நேர்காணலில் கலந்துகொண்டவர்களில் முக்கால்வாசிப் பேர் இந்த வரவு செலவுத் திட்டத்தில் தங்களுக்கு திருப்தியில்லையென தெரிவித்தனர்.
வருகின்ற தேர்தலுக்காக மக்களை கவரும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல அறிவிப்புகள் மக்களின் தேவைக்கு அப்பாற்பட்டவையென அவர்கள் செம்பருத்தியிடம் கூறினர்.
செம்பருத்தி.கொம் மேற்கொண்ட வரவுசெலவுத் திட்டம் குறித்த நேர்காணலை காணொளியில் பார்வையிட இங்கே அழுத்தவும்.