சைபுடின்: சோரோஸின் கைப்பாவை அரசு என்ற கருத்தை நிறுவும் தந்திரம் திருப்பித் தாக்கக்கூடும்

கோடீஸ்வரர் சோரோஸ் மலேசியாவில் அவர் ஆட்டு வைப்பதற்கேற்ப ஆடும் ஒரு கைப்பாவை அரசை அமைக்க முயல்கிறார் என்று குற்றம்சாட்டுவது பிஎன்னையே திருப்பித் தாக்கலாம் என்று எச்சரிக்கிறார் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா.

தம்மைப் பொறுத்தவரையில் பக்காத்தான் ரக்யாட்டை அல்லது சுவாராமை குறை சொல்வதைவிட பிஎன் “நல்லது” என்பதைக் காண்பிப்பதில்தான் ஆர்வம் கொண்டிருப்பதாக அந்த அம்னோ உச்சமன்ற உறுப்பினர் கூறினார்.

“நாம் பழித்துரைக்கும் இதே சோரோஸ் நாளையே நமக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், என்ன ஆகும்?

“அதனால்தான் நான் சோரோஸை அல்லது சுவாராமை சாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை”. கோலாலும்பூரில் அஸ்லி ஏற்பாடு செய்திருந்த மாநாடு ஒன்றை முடித்து வைத்த பின்னர் சைபுடின் மலேசியாகினியிடம் இவ்வாறு தெரிவித்தார்.

முன்பு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1997 ஆசிய நிதி நெருக்கடிக்கு சோரோஸ்தான் காரணம் என்று கூறிக் கொண்டிருந்தார்.

அண்மையில், அரசாங்கத்தைக் கவிழ்க்க சுவாராம், மலேசியாகினி போன்றவற்றுக்கு சோரோஸ் பண உதவி செய்கிறார் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து சோரோஸ் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

பிரதமர் சோரோஸை சந்தித்தார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் 2010-இல் நியு யோர்கில் சோரோஸைச் சந்தித்துள்ளார்.

இந்தக் கமுக்கமான சந்திப்பு மேன்ஹட்டனில் உள்ள ஆடம்பர தங்குவிடுதியான பிளாசா ஹோட்டலில் நடந்தது. கடந்த வாரம் பெர்காசா தகவல் பிரிவுத் தலைவர் ரஸ்லான் காசிமுடன் நடந்த பொதுவிவாதத்தின்போது சுபாங் எம்பி ஆர்.சிவராசா சொல்லித்தான் இது வெளியில் தெரிய வந்தது.

மலேசியாகினியும் அச்சந்திப்பு நடந்தது உண்மையே என்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

அதைப் பற்றிக் கருத்துரைத்த சைபுடின், அதனால்தான் பக்காத்தான் ரக்யாட்டைக் குறை சொல்வதை விடுத்து பிஎன்னின் மேன்மையை எடுத்துரைப்பது மேல் என தாம் வலியுறுத்துவதாகக் கூறினார்.

“தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே மக்களின் ஆதரவைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

“மற்றவர்களைக் கண்டனம் செய்வதை விடுத்து பிஎன் என்னென்னெ நன்மைகளைக் கொண்டுவரும் என்பதை எடுத்துரைப்பதையே நான் விரும்புகிறேன”, என்றார்.

TAGS: