மக்கள் ஆதரவு விரைவில் பிஎன் பக்கம் திரும்பும் என்கிறார் ஜாஹிட்

பினாங்கு பிஎன் தொடர்புத் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி “மக்கள் வாக்கு” விரைவில் பிஎன்னுக்கு ஆதரவாகத் திரும்பும் என்று நம்புகிறார். ஆளும் கட்சிக்கு ஆதரவு பெருகி வருவதையும் பக்காத்தான் ஆளும் மாநிலங்களில் பிரச்னைகள் தலையெடுத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

மலாய் நாளேடான உத்துசான் மலேசியாவில் வெளியிடப்பட்டிருக்கும் நேர்காணல் ஒன்றில் ஜஹிட் இதனைக் கூறியிருந்தார்.

அரசியல் கட்சிகளுக்குள்ள ஆதரவைக் காண்பிக்கும் நம்பகமான புள்ளிவிவரங்கள் தம்மிடம் இல்லை என்பதை அஹ்மட் ஜாஹிட் ஒப்புக்கொண்டார்.

“ஆனால், ஆங்காங்கே செய்யப்பட்ட சில கணிப்புகள் மலாய்க்காரர்களில் பெரும்பகுதியினர் பிஎன்னுக்குத் திரும்பி இருப்பதைக் காண்பிக்கின்றன. இந்தியர்களிலும் மிகப் பலர் பிஎன்னுக்கு திரும்பி வந்துள்ளனர்.

“நகர்ப்புற சீனர்களில் பெரும்பகுதியினர் டிஏபி-க்குப் போய்விட்டனர். சிலர்தான் பிஎன்னில் இருக்கின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் சீனர்கள் பிஎன்னுக்குத் திரும்பி விட்டனர்”, என்று அமைச்சர் கூறினார். 

மக்கள்  ஆதரவு திரும்புவதைப் பார்க்கும்போது கிளந்தானில் ஆளும் பாஸ் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என்ற நம்பிக்கை வருவதாகவும் அவர் சொன்னார்.

சிலாங்கூரிலும் கெடாவிலும் நிலவும் பிரச்னைகள் காரணாமாக நடுநிலை மக்கள் பிஎன்னை நோக்கி வருகிறார்கள் என்றவர் நினைக்கிறார்.

பினாங்கில் பிஎன் நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து குவிவதாக அஹ்மட் ஜாஹிட் கூறினார்.

மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து அவர்களின் ஆதரவைப் பெறுவதில் பிஎன் கண்டுள்ள வெற்றியைக் கண்டு பக்காத்தான் பொறாமை கொள்வதாகவும் அவர் சொன்னார்.