[டாக்டர் சேவியர் ஜெயக்குமார்]
இந்தியர்களுக்கு சாதித்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு தமிழ் பத்திரிக்கைகளுக்கும் வழங்கிய விளம்பரத்தில் உள்ள போலித்தனம் மறு நாளே வெளிப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் பிரதமர் நஜிப் துன் ராசாக் இந்திய சமுதாயத்திற்கு சாதனைகள் பல புரிந்துள்ளதைப் போன்று பக்காத்தான் மாநில அரசுகள் ஏதுமே செய்யாதது போன்று பீடிகை விளம்பரம் அளித்திருந்தார்கள்.
பிரதமரின் சாதனையை மிகைப்படுத்தியும், பக்காத்தான் மாநிலங்களின் சேவைகளை சிறுமைப்படுத்தியும், அரசாங்கப் பணத்தில் விளம்பரப்படுத்திக் கொண்டுள்ளனர்.
எங்களின் சாதனைகளை நாங்கள் பட்டியலிட தயார். அந்த விளம்பரச் செலவுகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள தயாரா?
எல்லாம் போக ரிம17 கோடிதான்!
விளம்பரத்தின் படி 2009 ம் ஆண்டிலிருந்து ரிம44 கோடி தமிழ்ப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டதாம். ஆனால் துணைக் கல்வி அமைச்சர் சொல்கிறார் 2013 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டையும் சேர்த்து ரிம37 கோடி என்கிறார்.
ஆக, 2013 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டைக் கழித்து, கேள்விக்குறியாக உள்ள 2012 ஆம் ஆண்டு மானியத்தையும் நீக்கினால், 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளுக்கு பிரதமர் நஜிப் அரசாங்கம் வழங்கியுள்ளது வெறும் ரிம17 கோடியையே எட்டும் என்பதனை இந்தியர்கள் உணராமலில்லை.
அதே வேளையில் பேராக்கில் பெல்டா குடியேற்றக்காரர்களின் பிள்ளைகளுக்காகக் கட்டப்பட்ட ஒரே தேசிய பள்ளியின் கட்டுமானத்திற்குப் பிரதமர் ரிம12 கோடி செலவிட்டுள்ளதையும் இந்தியர்களுக்கு பட்டியலிட்டு காட்டியிருந்தால், அச்செய்கை பாராட்டுக்குரியதாக இருக்கும்.
ஆகவே, விளம்பரத்தில் காணப்படுபவைகளை ஒவ்வொன்றாகப் பிரித்து அதில், எவ்வளவு உண்மை உண்டு என்று சமுதாயம் ஆய்வு செய்யாது என்ற நினைப்பில் விளம்பரம் அளித்துள்ளார்கள்.
சரி! சரி!
ஆனால், கடந்த காலத்தில் இது போன்று வாக்குறுதிகளை எல்லாம் கேட்டுச் சமுதாயம் விரக்தியடைந்து விட்டது. உதாரணமாக, கடந்த ஆண்டு பிரதமர் நஜிப்புடன் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாசுக்கு தீவாவளிக்கு விருந்துக்கு வந்த மஇகா தேசிய தலைவர் பழனிவேல் கிள்ளான் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளிக்கு வாக்களித்த ரிம8 இலட்சம் என்னவானது? இன்னும் ஓர் ஆண்டுகூட ஆகவில்லை, அதற்குள் எப்படித் தர முடியும் என்கிறீர்களா! சரி.
ஷா ஆலாம் மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு 2008 ம் ஆண்டில் அன்றைய மஇகா தலைவர் அளித்த ரிம25 இலட்சம் வாக்குறுதி என்ன ஆனது? அதற்கும் இன்னும் 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை என்கிறீர்களா? சரி.
கூரை ஏன் பறக்கிறது?
மாநில பொதுப்பணி இலாக்கா 1987 ஆம் ஆண்டிலேயே ஜாலான் ஆக்கோ தமிழ்ப்பள்ளி கட்டடம் உபயோகத்திற்குத் தகுதியற்றது என்று கூறிவிட்டது. உடனே, அன்றைய தேசியத்தலைவரும், ம.இ.கா வின் ஒரே அமைச்சரான ச.சாமிவேலு மஇகாவின் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள அப்பள்ளிக்கு மாற்றுக்கட்டத்திற்கு அளித்த வாக்குறுதி என்ன ஆனது?
நிதி ஒதுக்கீடாவது கிடைத்ததா, அல்லது வேறு எவர் கணக்கிலும் பணம் போய் சேர்ந்து விட்டதா?
அரசாங்க மானியம் கொடுக்கப்பட்டிருந்தால், 1992ஆம் ஆண்டில் ஒரு முறையும், பிறகு 2012 ஆம் ஆண்டில் மீண்டும் அப்பள்ளியின் கூரை ஏன், எப்படி இடிந்தது?
இப்படி இன்னும் பல கேள்விகளை இந்திய சமுதாயத்தின் முன்வைக்க வேண்டும். அதனால், அங்கே கொடுத்தோம், இங்கே தந்தோம் என்ற கதை எல்லாம் வேண்டாம். எங்கே, எவ்வளவு, யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று பட்டியலைக் கொடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நிதியை பெற வசதியாக இருக்கும்.
கார்ட் போர்ட் காசோலைகள்!
கடந்த 2012 ஆம் ஆண்டின் பக்காத்தான் நிழல் பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளின் கட்டடச் சீரமைப்புக்கு ரிம20 கோடி அறிவித்தவுடன் போட்டிக்கு பாரிசான் 10 கோடியை அறிவித்தது. ஆனால் அதன்பின் அமைச்சருடன் மாதிரி காசோலைகளை ஏந்தி நின்ற பள்ளி நிர்வாகத்தினர், தங்களுக்கு எந்தப் பணமும் கிடைக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர்.
இப்பொழுது தமிழ்ப்பள்ளி கட்டுமானக் குத்தகைகளை வழங்கிய சூரியா கூட்டுறவில் மோசடியா? மூன்று இயக்குனர்கள் சேர்ந்து கையெழுத்திட வேண்டிய காசோலைகளில் இருவர் மட்டும் கையெழுத்திட்டுப் பணம் பெற்றது எப்படி?
ஏன் இவ்வளவு பெரிய தொகை சூரியா கூட்டுறவில் வரவு கைக்கப்பட்டது? என்றெல்லாம் ஈப்போ பாராட் உறுப்பினர் குலேசேகரன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆக, பள்ளி நிர்வாகத்தினர் புகார் கூறிய படியே பணம் பள்ளிக்குச் சென்று சேரவில்லை! வழியில் ஏதோ தொல்லை என்பது விளங்குகிறது.
ஆக, 2012 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ரிம10 கோடியை யார் கணக்கில் வரவு வைப்பது?
இப்படியே எல்லாவற்றையும் கணக்கு பார்த்துக் கழித்து விட்டால் பிரதமர் நஜிப் கொடுத்ததில் இந்திய சமுதாயத்திற்கு என்ன மிஞ்சும் என்பதனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.