ஊராட்சித் தேர்தல்களை வரவேற்கிறார் அம்னோ துணை அமைச்சர்

பிஎன்னில் உள்ள மற்றவர்களைப்போல் அல்லாது உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா, ஊராட்சித் தேர்தலை வரவேற்கிறார், அது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய கூறு என்கிறார்.

பினாங்கில் இளைஞர்களும் ஊராட்சி அரசியலும் (Anak Muda dan Demokrasi Tempatan) என்னும் கருத்தரங்கில் கலந்துகொண்ட சைபுடின் மாணவப் பருவத்தில் சமூக இயக்கங்களில் ஈடுப்பட்ட காலம் தொட்டு 1960-களில் தடைசெய்யப்பட்ட  ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்திருப்பதாகக் கூறினார்.

“பல தடவை சொல்லியிருக்கிறேன்.  இன்று மறுபடியும் சொல்கிறேன். ஊராட்சித் தேர்தலை வரவேற்கிறேன்”, என்று சைபுடின் குறிப்பிட்டதும் கொம்டாரில் அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் ஆரவாரம் செய்து அதை வரவேற்றனர்.

அவ்விவகாரத்தில் மாநில அரசின் கோரிக்கைக்கு முறையான பதில் அளிக்காதிருக்கும் தேர்தல் ஆணையத்தையும் அவர் கண்டித்தார்.

1960 ஊராட்சித் தேர்தல் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு விட்டதால் அந்தத் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறியது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

இப்போதைக்கு ஊராட்சித் தேர்தலை நடத்த முடியாது என்றாலும் அதை மீண்டும் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளலாம் என்று தெமர்லோ எம்பியுமான சைபுடின் கூறினார்.