சவுதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி

சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில், கார் (மகிழூந்து) ஓட்டியதற்காக முதன் முறையாக ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும் வேட்பாளராக நிற்கவும் அனுமதியளித்தார்.

எனினும் கார் ஓட்டுவதற்கு இன்னும் பெண்களுக்கு அந்நாட்டில் அனுமதி வழங்கப்படவில்லை. அதை எதிர்த்து, சமீபத்தில் பல பெண்கள் கார் ஓட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நகர் வீதிகளில் கார் ஓட்டும் போது கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணுக்கு ஜெட்டா நகர நீதிமன்றம் 10 கசையடிகள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. மற்ற இரு பெண்கள், இந்தாண்டின் இறுதியில் நீதிமன்றம் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விசயத்தில் முதன்முறையாக வழங்கப்பட்ட இத்தண்டனை, சவுதியில் கார் ஓட்டும் புரட்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக கைதுசெய்யப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.