மலேசிய இந்திய இளைஞர்கள் குண்டர்தனத்தில் ஈடுபடுவதை விசாரிக்க “உயர் நிலை” ஆணையம் ஒன்று தேவை என்கிறார் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்.
அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் கண்டறிய அப்படி ஒரு விசாரணை ஆணையம் தேவை என்றும் அதில் மலேசிய சமுதாயத்தின் எல்லாத் துறையினரின் பங்கேற்பும் இருக்க வேண்டும் என்றாரவர்.
“கடந்த சில ஆண்டுகளில் இந்திய இளைஞர்களின் குண்டர்தனம் மோசமடைந்துள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் இந்தியர்களின் விகிதாசாரத்தைவிட அதிகமாகவுள்ளது”, என லிம் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த வட்டமேசை கலந்துரையாடலில் கூறினார்.
இந்தியர்கள் தோட்டப்புறங்களிலிருந்து குறைந்த வேலைவாய்ப்பு கொண்ட நகர்பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டார்கள்.
“வறுமையும் நீண்டகாலமாக சமுதாய-பொருளாதார-கல்வித் துறைகளில் ஒதுக்கப்பட்டதும் பாகுபாட்டுக்கு ஆளானதும் அவர்களை இன்று குண்டர்தனத்துக்குள் கொண்டு சென்றுள்ளது”.
இது இந்தியர் பிரச்னை மட்டுமல்ல, ஒரு தேசிய பிரச்னையுமாகும் என்பதை அரசாங்கம், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உணர்த்தி இதற்கு முழுமையான தீர்வு காண வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.