மலேசியாவின் தேசிய கடன் மொத்த தேசிய உற்பத்தியில் (ஜிடிபி) 53 விழுக்காடு என்றாலும் நாடு அதனால் ஒன்றும் நொடித்துப் போய்விடாது என்கிறார் மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங்.
“கீனிசியன் கோட்பாட்டை உருவாக்கிய இங்கிலாந்தின் புகழ்பெற்ற பொருளாதார மேதை ஜான் மைனார்ட் கீனிஸ், நாடு பொருளாதச் சுணக்கத்தில் இருக்கும்போது அல்லது மற்ற நாடுகளில் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ள வேளையில் நாட்டில் பொருளாதார மற்றும் அடிப்படைக் கட்டுமான வளர்ச்சிப் பணிகள் மூலமாக தேவையை அதிகரிக்க பற்றாக்குறை பட்ஜெட்டைக் கொண்டு வரலாம் என்று சொல்லியிருக்கிறார்.
“கீனிஸியன் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையைத்தான் நமது அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல.” வீ இன்று காலை மசீச இளைஞர் பகுதியின் ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
மலேசியா நொடித்துப்போகும் என்று கூறும் பக்காத்தான் ரக்யாட் ஜப்பானின் தேசிய கடன் அதன் ஜிடிபி-யில் 211 விழுக்காடாகவும், சிங்கப்பூரின் கடன் ஜிடிபி-யில்118 விழுக்காடாகவும், பிரிட்டனின் கடன் ஜிடிபி-யில் 85 விழுக்காடாகவும், ஜெர்மனியின் கடன் ஜிடிபி-யில் 81 விழுக்காடாகவும், அமெரிக்காவின் கடன் அதன் ஜிடிபி-யில் 67 விழுக்காடாகவும் இருப்பதைக் கவனிக்கவில்லை என்று வீ கூறினார்.
“அவை பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் பெரிதும் மதிக்கும் நாடுகளாகும்.
“எனவே, மலேசியா நொடித்து போகும் நிலையை நோக்கிச் செல்வதாகக் கூறினால் அவர்களின் இந்த ‘முன்மாதிரி’ நாடுகள் நீண்டகாலத்துக்கு முன்பே நொடித்துப் போயிருக்க வேண்டும்”.
உலக நிதி இதழ், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பேங்க் நெகாரா கவர்னர் ஜெட்டி அஹ்தார் அசீசை தலைசிறந்த மத்திய வங்கி கவர்னராக தேர்ந்தெடுத்துப் பாராட்டியுள்ளதை வீ சுட்டிக்காட்டினார்.மலேசியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லையென்றால் அது அவ்வாறு செய்திருக்குமா என்றவர் வினவினார்.
அரசாங்கம், அதிகரித்துவரும் குற்றச்செயல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீ கேட்டுக்கொண்டார்.
“அரசாங்கம் அறிவிக்கும் குற்ற விகிதம் பற்றிய புள்ளிவிவரங்களில் மக்களுக்கு அக்கறை இல்லை. புள்ளிவிவரங்கள் பிரச்னையைத் தீர்க்க உதவமாட்டா. சொல்லப்போனால், மக்கள் புள்ளிக்கணக்குகளை நம்புவதே இல்லை.
“வீட்டிலும் தெருக்களிலும் பயமின்றி இருக்க வேண்டும்.அதுதான் அவர்கள் விரும்புவது”.
எனவே, ஊடகங்கள் குற்ற விவகாரங்களைப் பெரிதுபடுத்துவதாகக் கூறுவதை விடுத்து அரசாங்கம் போலீஸ் படையின் திறமையை வலுப்படுத்துவது உள்பட “உருப்படியான நடவடிக்கைகளை”மேற்கொள்ள வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.