கேமிரன் மலை எதிர்ப்புக் கூட்டத்தில் ஒராங் அஸ்லிக்கள் பங்கேற்பு

கேமிரன் மலை வட்டாரம் எதிர்நோக்கும் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் மீது ஆட்சேபம் தெரிவிப்பதற்காக நேற்று காலை நடத்தப்பட்ட Himpunan Rakyat Cameron (HRC) பேரணியில் 250 பேர் கலந்து கொண்டனர்.

காடுகள் குறிப்பாக உலு ஜெலாய் நீர்மின்சாரத் திட்டத்துக்காக அழிக்கப்படுவது உட்பட பல பிரச்னைகள் மீது எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக அந்தப் பேரணி நடத்தப்பட்டது.

பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்த மக்கள் கேமிரன் மலை மாவட்ட மன்றத்தின் கார் நிறுத்துமிடத்தில் காலை 11 மணி வாக்கில் மக்கள் கூடியதாக Himpunan Rakyat Cameron அமைப்பின் செயலாளர் சுரேஷ் குமார் கூறினார்.

ஒன்றரை மணி நேரம் நீடித்த அந்தக் கூட்டத்தின் போது சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. உள்ளூர் மக்களும் வெளியூர் மக்களும் அதில் பங்கு கொண்டதால் விழாக்கால சூழ்நிலை அங்கு நிலவியது,” என அவர் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

கேமிரன் மலை எதிர்ப்புக் கூட்டத்தில் ஒராங் அஸ்லி மக்கள் முதன் முறையாக பங்கு கொண்டது தமக்கு மகிழ்ச்சி அளித்ததாகவும் அவர் சொன்னார்.

“ஒடுக்குமுறை இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்பதை அது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலு ஜெலாய் நீர் மின்சாரத் திட்டத்துக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராமத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த அணை கட்டப்படுவதால் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை எடுத்துரைத்தனர்.

போலீசாரும் ரேலா உறுப்பினர்களும் பெரும் எண்ணிக்கையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போதிலும் மக்கள் அச்சமடையவில்லை என்றும் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

அந்த அணைத் திட்டத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளும் பிரகடனத்தை பேரணி முடிவில் அவர் வாசித்தார். கோலா தெர்லா நீர்ப் பிடிப்புப் பகுதியை பண்ணை நடவடிக்கைகள் மாசுபடுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சுற்றுச்சூழல் போராளிகளும் பேரணியில் பங்கு கொண்டிருந்தனர்.

அந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த கேமிரன் மலை போலீஸ் மாவட்ட பொறுப்பதிகாரி ஸாஹாரி வான்-ஐயும் கேமிரான் மலை மாவட்ட மன்றத்தையும் அவர் பாராட்டினார்.