கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலை வைத்து அரசியல் நடத்தும் மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் ஆர். நடராஜா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சிலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் G. குணராஜ் கூறினார்.
கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலுக்கு ஆபத்து விளைவிக்ககூடிய கட்டுமானத் திட்டத்திற்கு 2007-ல் அனுமதி கொடுத்தது பாரிசான் அரசுதான் என்று தெரிந்தும் அத்திட்டத்தை சிலாங்கூர் பக்கத்தான் அரசு அனுமதித்ததாக குற்றம்சாட்டி அரசியல் நோக்கத்திற்காக அறிக்கை வெளியிட்டுள்ள நடராஜா, கோயில் தலைவர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்; அவர் இருக்க வேண்டிய இடம் மஇகா அல்லது பாரிசான் என்று செம்பருத்தி தொடர்பு கொண்டபோது குணராஜ் கூறினார்.
கோயிலுக்கு அருகில் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படும் இத்திட்டத்திற்கு 2007-ல் அனுமதி கொடுக்கப்பட்டதென்றால் கோயில் நலனைக் காக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ள அதன் தலைவர் நடராஜா இவ்வளவு காலமாக தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று COMINGO இயக்கத்தின் செயலாளருமான குணராஜ் கேள்வியெழுப்பினார்.
2007-ஆம் ஆண்டு அப்போதைய மந்திரி பெசார் கீர் தோயோ தலைமையிலான கம்போங் ரிம்பா ஜெயா கோயில் உடைப்பானது 2008-ல் சிலாங்கூர் மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்ற வழிவகுத்தது; அதேபோன்று, வருகின்ற தேர்தலில் புத்ரஜெயாவை மக்கள் கூட்டணி கைப்பற்றுவதற்கான நிலையை நடராஜவின் அரசியல் நாடகம் வழிவகுத்துள்ளதாக குணராஜ் குத்தலாக கூறினார்.
மலேசிய தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று பகல் கனவு காணும் அரசியல்வாதிகள் அனைவரும் வருகின்ற தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள் என்று கூறிய குணராஜ், மலேசிய இந்துக்களின் வரலாற்று சிறப்புமிக்க பத்துமலை கோயில் மீது அக்கறையுள்ள பக்தர்கள் கோயில் நலனுக்காக முதலில் நடராஜாவை பதவியிலிருந்து அகற்றவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.