Tanda Putera திரைப்படத்தில் 1969 மே 13 இனக் கலவரங்கள் அடிப்படையிலான ரத்தக்களறியும் குழப்பமும் சித்தரிக்கப்பட்டுள்ளது, பல்வேறு இனங்கள் அமைதியாக இந்த நாட்டில் வாழ வேண்டியதின் அவசியத்தை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துவதற்கு அவசியமாகும்.
இவ்வாறு தகவல், தொடர்பு, பண்பாட்டுத் துணை அமைச்சர் மாக்லிம் டெனிஸ் டி குருஸ் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
“அந்தத் திரைப்படம் இனவாதத்தை தொட்டாலும் இன ஒற்றுமையின் தேவையை வலியுறுத்துவதற்கு
மே 13 முக்கியமான நினைவூட்டலாக இருக்கும்,” என்றார் அவர்.
‘இன்றைய இளைஞர்கள் அடைந்துள்ள முதிர்ச்சியைக் கொண்டு’ வரலாற்றில் ஒரு கல்வி அம்சமாக கடந்த காலச் சம்பவங்களை சித்திரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.”
ரசிகர்கள் மீது அந்தத் திரைப்படம் பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய எதிர்மறையான இனவாத அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுவதை மாக்லின் நிராகரித்தார்.
“இன்னும் அந்தத் திரைப்படம் திரையிடப்படாத வேளையில் அது எதிர்மறையான இனவாத விளைவுகளைக் கொண்டு வரும் எனச் சொல்வது காலத்துக்கு முந்தியதாகும்.”
2.7 மில்லியன் ரிங்கிட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள அந்தத் திரைப்படத்துக்கு பினாஸ் என்ற தேசிய திரைப்பட நிறுவனம் முழுக்க முழுக்க நிதி உதவி செய்துள்ளது. நாட்டுப்பற்றை வலியுறுத்தும் திரைப்படங்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசாங்க வியூகத்தின் ஒரு பகுதியாக அந்தப் படம் அமைந்துள்ளது.
இனவாத உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் பெசோனா பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷுஹாய்மி பாபா இயக்கியுள்ள சர்ச்சைக்குரிய அந்தத் திரைப்படத்துக்கான அரசாங்க ஆதரவு பற்றி பிகேஆர் கிளானா ஜெயா உறுப்பினர் லோ குவோ பேர்ன் வாய்மொழியாக எழுப்பிய கேள்விக்கு மாக்லின் பதில் அளித்தார்.
அரசாங்க நிபந்தனைகளை அந்தத் திரைப்படம் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய பினாஸ் அதனை கடுமையாக ஆய்வு செய்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
ஊடகங்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட அமைப்புக்களுக்கும் போட்டுக் காண்பிக்கப்பட்ட பின்னர் Tanda Putera மீதான சர்ச்சை உருவானது. அந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பல சூழ்நிலைகள் உண்மையல்ல என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. அதில் ‘இனவாத’ தொனி தென்படுவதாக மற்றவர்கள் குறை கூறியுள்ளனர்.