பினாங்கு பிஎன் : சீனப்பள்ளிக்கு ரிம3 மில்லியன், தேர்தல் வருவதால் கொடுக்கப்பட்டதல்ல

புக்கிட் மெர்தாஜாமில் எஸ்எம்ஜெகே ஜிட் சின் II சீன இடைநிலைப் பள்ளியின் கட்டிட நிதிக்கு மேலும் ரிம3மில்லியன் அரசாங்கம் கொடுக்கும் என பினாங்கு பிஎன் அறிவித்துள்ளது.

பினாங்கில், குறிப்பாக செபறாங் பிறை தெங்கா, செபறாங் பிறை செலாத்தானில் உள்ளவர்களுக்கு அது  “நல்ல செய்தி” என்று மாநில கெராக்கான் தலைவர் டாக்டர் தெங் ஹொக் நான் கூறினார்.

அக்டோபர் 11-இல், மாநில பிஎன் பேராளர்கள்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்துப் பேசியதாகவும் அப்போதுதான் அரசாங்கம் அம்மான்யம் வழங்க முடிவு செய்ததாகவும் தெங் கூறினார்.

இதற்குமுன் அக்கட்டிட நிதிக்கு அரசாங்கம் ரிம1மில்லியன் வழங்கியது. அப்பள்ளிக் கட்டிடத்தை ரிம30 மில்லியன் செலவில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு அதன் இருப்பில் இருப்பது ரிம4 மில்லியன்.

“இது எல்லாப் பள்ளிகளுக்கும் உதவ பிஎன் அரசு உண்மையில் அக்கறை கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது.”, என்று தெங் இன்று  செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

ஜிட் சின் II-தான் செபறாங் பிறையில் அமையும் முதலாவது சீன இடைநிலைப் பள்ளியாகும். பிப்ரவரி மாதம் அதற்கு உரிமம் கிடைத்தது.

உரிமம் கிடைக்க பினாங்கு பிஎன் உதவியது

அப்பள்ளி உரிமத்துக்காகக் காத்திருப்பதாக பல செய்தியாளர் கூட்டங்களில் கூறி வந்த பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கையும் அவர் சாடினார்.

“பினாங்கு பிஎன் உதவியால் குறுகிய காலத்தில் எங்களுக்கு உரிமம் கிடைத்தது.

“தெங் சாங் இயோவின் தலைமையில் செயல்படும் மாநில பிஎன் செய்த உதவியைப் பாராட்டுகிறோம்.  கெராக்கான், மசீச, மஇகா, மக்கள் முற்போக்குக் கட்சி ஆகிய எல்லாக் கட்சிகளும் அதற்கு உதவின”, என்றாரவர்.

தேர்தல் வருவதால்தான் அரசாங்கம் அந்நன்கொடையை வழங்கியது என்று சொல்லப்படுவதையும் தெங் மறுத்தார்.

“எங்களுக்கு வாக்களியுங்கள். அப்போதுதான் உதவுவோம் என்று நான் எப்போதுமே சொன்னது கிடையாது. எங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கினால் இன்னும் கூடுதலாக உதவி செய்வோம் என்று மட்டுமே சொன்னேன்”, என்றாரவர்.

இதனிடையே  மாநில மசீச தலைவர் தான் செங் லியாங், பிஎன், டிஏபி-யைப் போன்றல்ல என்றார். டிஏபி வெறும் ரிம300,000 மட்டுமே கொடுத்தது. கொடுத்துவிட்டு பல செய்தியாளர் கூட்டங்கள் நடத்தி விளம்பரப்படுத்திக்கொண்டது.

லிம்மும் மாநில அரசும் அப்பள்ளிக்கு உதவ நினைத்தால் கூடுதல் நிதி கொடுக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

TAGS: