பத்துமலைக் கோயிலுக்கு அருகில் 29 மாடிகளைக் கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியின் கட்டுமானத்தை நிரந்தரமாக நிறுத்துவதற்கான ஆணையை வெளியிடுவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு அந்தக் கோவில் நிர்வாகம் வழங்கியுள்ளது.
“மாநில அரசாங்கம் அந்தக் கட்டுமானத்தை நிரந்தரமாக நிறுத்துகிறதா இல்லையா என்பதைக் காண நாம் மாநில அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுப்போம்,” என ஸ்ரீ சுப்ரமணியர் கோவில் குழுத் தலைவர் ஆர் நடராஜா கூறினார்.
கோவிலின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் அது எந்தத் தரப்புக்கள் மீது வழக்குப் போடும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், தாம் அந்த விவகாரம் மீது முதலில் சட்ட ஆலோசனையை நாடப் போவதாகச் சொன்னார்.
கோலாலம்பூருக்கு வடக்கில் உள்ள அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி கட்டப்படுவதை ஆட்சேபிக்கும் பொருட்டு நடத்தப்பட்ட 300 பேர் கலந்து கொண்ட கூட்டத்தை வழி நடத்திய பின்னர் நடராஜா நிருபர்களிடம் பேசினார்.