தேர்தல் ஆணையம்(இசி), வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதை அனுமதிக்க விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்திருப்பதால் அதை அமல்படுத்த வெளியுறவு அமைச்சு ஆயத்தமாகவுள்ளது.
“இசியின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். தூதரகப் பணியாளர்கள் அதை அமல்படுத்த தயார்நிலையில் உள்ளனர்”,என்று வெளியுறவு அமைச்சு கூறியதாக இன்றைய பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு அது அரசிதழில் வெளியிட்டப்பட்டதும் அமைச்சு அதை வெளிநாடுவாழ் மலேசியர்களுக்குத் தெரிவிக்க தேவையான எல்லாவற்றையும் செய்யும் என வெளியுறவு துணை அமைச்சர் ஏ.கோகிலன் பிள்ளை கூறியதாக அச்செய்தி குறிப்பிட்டது.
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களைத் தொடர்புகொண்டு தங்களை அஞ்சல் வாக்காளர்களாக பதிந்துகொள்ள வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
அஞ்சல்வழி வாக்களிப்பதற்கு இடமளிக்க தேர்தல் விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு அத்திருத்தங்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்திலேயே தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே செய்தி, இசி துணைத்தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார்(இடம்) அஞ்சல்வழி வாக்களிப்பதில் ஆர்வமுள்ள வெளிநாடுவாழ் வாக்காளர்கள் தூதரகங்களில் தங்களின் முகவரிகளை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறுகிறது.
அது வாக்குச் சீட்டுகளைச் சரியான முகவரிகளுக்கு அனுப்பி வைக்க உதவும் என்றாரவர்.