தொழில் அதிபர் சைட் மொக்தார், நாட்டில் உள்ள எல்லாவற்றையும் தமதாக்கிக்கொள்ளப் பார்க்கிறார் என்று குறைகூறிய அம்னோ கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ராடினை மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா சாடியுள்ளது.
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் அப்படிச் சொன்னது “ துரதிஷ்டவசமானது” என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி ஒன்று கூறுகிறது.
சைட் மொக்தார்(வலம்) தொழில்துறையில் சிறந்து விளங்கும் மலாய்க்காரர்களில் ஒருவர் என்பதை எண்ணி பங் மொக்தார் பெருமைப்பட வேண்டும் என்றவர் குறிப்பிட்டார்.
அந்த எம்பியின் கூற்றில் பேச்சலங்காரம்தான் தெரிந்ததே தவிர உண்மை இல்லை என்றாரவர்.
“பங் மொக்தார் மேலாதிக்கம் பற்றிப் பேச நினைத்திருந்தால் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களாக விளங்கும் மலாய்க்காரர்-அல்லாத மற்ற ஒன்பது பேரையும் சேர்த்தே குறை சொல்லியிருக்க வேண்டும்”.
சைட் மொக்தார் தகுதியின் அடிப்படையில் வெற்றி பெற்றவர் என்று கூஇய இப்ராகிம் அலி, அவர் 63 பள்ளிவாசல்களைக் கட்டி சமுதாயத்துக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார் என்றார்.
செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட பங் மொக்தார், சைட் மொக்தார் நாட்டில் எல்லாத் தொழிகளையும் தாமே எடுத்துக்கொள்ள நினைக்காமல் மற்ற பூமிபுத்ராக்களும் தொழிசெய்ய இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.