டெக்சி ஓட்டுநர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி தங்களுக்குத் தனிப்பட்ட உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று நாடாளுமன்ற இல்லத்தில் அவர்கள் கொடுத்த மகஜரில் உள்ள 11 கோரிக்கைகளில் அதுவும் ஒன்று.
அம்மகஜரை டெக்சி ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் இடைக்காலக் குழு ஒன்று, பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசிடமும் நிலப் பொதுப்போக்குவரத்து ஆணைய(ஸ்பேட்) தலைமை நடவடிக்கை அதிகாரி அஸ்கார் அஹமட்டிடமும் ஒப்படைத்தது.
Tuntutan Pemandu Teksi Malaysia (டெக்சி) என்றழைக்கப்படும் அக்குழு, மீட்டர் கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. புரோட்டோன் கார்கள் நீடித்தத்தன்மை கொண்டவை அல்ல என்றும் அவற்றைப் பராமரிக்கும் செலவு அதிகம் என்றும் குறிப்பிட்டு மற்ற வகை கார்களைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பது அதன் இன்னொரு கோரிக்கை.
“எங்கள் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என்றால் அல்லது அடுத்த பொதுத் தேர்தலுக்குள் அவற்றை நிறைவேற்றவில்லை என்றால் அவை நிறைவேற்றப்படும்வரை டெக்சி ஒவ்வொரு மாநிலத்திலும் கண்டனக் கூட்டங்களை நடத்தும்”, என்று இடைக்காலத் தலைவர் முகம்மட் ரிட்சுவான் முகம்மட் டாவுட் தெரிவித்தார்.
இப்போதைக்கு டெக்சி உரிமங்கள் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. அவை ஓட்டுனர்களுக்கு அவற்றைக் வாடகைக்கு விடுகின்றன.
நிறுவனங்களுக்கே டெக்சி உரிமங்கள் என்பதில் அரசாங்கம் விடாப்பிடியாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும், ஓட்டுனர்கள் மருத்துவமனையில் நோயுற்றிருக்கும்போதும் வாடகைப் பணம் கொடுக்க வேண்டியதில்லை என்று விலக்களிக்கப்பட வேண்டும் என்று அக்குழு கோரியுள்ளது.
மேலும், டெக்சிகள் தொடர்பில் பயனீட்டாளர் வீழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட வேண்டும்;
விமான நிலையங்கள் போன்ற இடங்களில் டெக்சிகள் செயல்படுவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்;
கேஎல் இலவச பேருந்து சேவை சுற்றுப்பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும், உள்ளூர்வாசிகளை ஏற்றிச் செல்லக்கூடாது;
டெக்சி ஓட்டுனர்களின் நலம் காக்க ஓர் அமைப்பு வேண்டும் முதலிய கோரிக்கைகளையும் அக்குழு விடுத்துள்ளது.
மகஜர் ஒப்படைப்பு நிகழ்வில் அம்பாங் எம்பி சுரைடா கமருடின், பிகேஆர் சட்ட விவகாரப் பிரிவு உறுப்பினர் தீராஜ் பார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“நஸ்ரி டெக்சி ஓட்டுனர்களுக்கு ஒரு நிபுணத்துவப் பள்ளி தேவை
என்றார். அத்துடன் ஓர் ஆண்டுக்கு என்றில்லாமல் உரிமங்கள் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்”, என்று தீராஜ் தெரிவித்தார்.
“அவர் சொன்னதை ஏற்கிறேன். அவ்விசயத்தை அமைச்சரவைக்குக் கொண்டுசெல்வதாக நஸ்ரி உறுதி கூறியுள்ளார்.பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை”.
ஆனால், நஸ்ரியின் கருத்து சுரைடாவுக்கு வியப்பளித்தது. இவ்விசயத்தில் பிரதமர்துறை ஸ்பேட்டு ஒரு உத்தரவைப் போடாமல் வெறுமனே கருத்துரைப்பது ஏன் என்று அவருக்குப் புரியவில்லை.
ஸ்பேட்டின் எதிர்வினை பற்றி வினவியதற்கு அந்த ஆணையம் டெக்சி ஓட்டுநர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்று கூறியிருப்பதாக அவர் சொன்னார்.