வாரிசான் மெர்டேகா கோபுரம் 118 மாடிகளைக் கொண்டிருக்கும்

உத்தேச வாரிசான் மெர்டேகா கோபுரம் முதலில் திட்டமிடப்பட்டதுபோல் 100 மாடிகளைக் கொண்டிருக்காமல் 118 மாடிகளைக் கொண்டிருக்கும். அக்கட்டிடத்தைக் கட்டும் பிஎன்பி மெர்டேகா வெண்ட்சர்ஸ் சென்.பெர்ஹாட் ஏற்கனவே அதை மறுத்திருந்தாலும் அக்கோபுரம் 118 தளங்களைக் கொண்டிருக்கும் என்பதைக் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

புக்கிட் பிந்தாங் எம்பி போங் குய் லுன்னுக்கு வழங்கிய எழுத்துவடிவிலான பதிலில் அமைச்சு இதனைத் தெரிவித்திருந்தது.

பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக் 2010 பட்ஜெட் உரையில், 100மாடி வாரிசான் மெர்டேகா கோபுரம் ரிம 5பில்லியன் செலவில் கட்டப்படும் என்று அறிவித்தார்.அந்த அறிவிப்புக்கு நிறைய எதிர்ப்பு கிளம்பியது. அதை ஊதாரித்தனமான செலவு என்று இணையப் பயனர்களும் மாற்றரசுக் கட்சியினரும் குறை கூறினார். ரிம5 பில்லியனை நலவளர்ச்சித் திட்டங்களுக்கும் கல்விக்கும் பொதுப்  போக்குவரத்தை மேம்படுத்தவும் செலவிடலாம் என்றவர்கள் அறிவுறுத்தினர். 

ஆனால், அத்திட்டதைத் தற்காத்துப் பேசிய நஜிப், அது விரயமல்ல என்றும் அது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் கூறினார்.