பக்காத்தான் ராக்யாட் வரும் சனிக்கிழமை சிரம்பானில் ‘மக்கள் எழுச்சிக் கூட்டம்’ என அழைக்கப்படும் மாபெரும் பேரணியை நடத்துவதற்குப் போலீஸ் அனுமதி கொடுக்காது.
அக்டோபர் 24ம் தேதி மூன்று பக்காத்தான் பேராளர்கள் சிரம்பான் போலீஸ் தலைமையகத்துக்கு வந்ததாகவும் ஆனால் அவர்கள் விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும் சிரம்பான் ஒசொபிடி சைபுல் அஸ்லி கமாருதின் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“பாரத்தைப் பூர்த்தி செய்வதற்கான காலக் கெடு முடிந்து விட்டது. அவர்கள் பாரத்தைப் பூர்த்தி செய்யத் தவறி விட்டனர். அதனால் அந்தப் பேரணிக்கு அனுமதி கொடுப்பதில்லை என நான் முடிவு செய்ய வேண்டியுள்ளது,” என அவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
முதலில் அந்த அரசியல் பேரணி கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் தேசிய அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது சிரம்பானில் தாமான் சிரம்பான் ஜெயாவுக்கு மாற்றப்பட்டது. நெகிரி செம்பிலான் மாநிலத்தை அடுத்த பொதுத் தேர்தலில் கைப்பற்ற பக்காத்தான் எண்ணம் கொண்டுள்ளது.
சனிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு மணி 12 வரையில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அந்தப் பேரணியில் ஐயாயிரம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது. பெர்சே எழுப்பியுள்ள எட்டு தேர்தல் சீர்திருத்தக் கோரிக்கைகள், லினாஸுக்கு எதிரான போராட்டம், பெங்கெராங்கில் பெட்ரோலிய மய்யம் அமைக்கப்படுவது, கிளந்தான் எண்ணெய் உரிமப் பணக் கோரிக்கை ஆகிய விஷயங்களில் அந்தப் பேரணி கவனம் செலுத்தும்.