விருந்தினர் வெளியேறிய விஷயத்தை சைனா பிரஸ் பெரிதுபடுத்தியதாக சுவா புகார்

கடந்த சனிக்கிழமையன்று மசீச விருந்து ஒன்றின் போது விருந்தினர்கள் ‘வெளியேறிய’ விஷயத்தை சைனா பிரஸ் வேண்டுமென்றே பெரிதுபடுத்தியுள்ளதாக கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்றிரவு கடும் மழை பெய்த போதிலும் பல விருந்தினர்கள் விருந்து நிகழ்வில் தொடர்ந்து இருந்த உண்மையை அந்த ஏடு அலட்சியம் செய்து தமக்குத் தவறான தோற்றத்தைத் தந்து விட்டதாக அவர் சொன்னார்.

” சில ஊடகங்கள் அந்த விஷயத்தைப் பெரிதுபடுத்துவதாக நான் எண்ணுகிறேன். அன்று இரவு மணி 7.30 வரை நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இரவு எட்டு மணி வாக்கில் எல்லா மேசைகளும் நிரம்பி விட்டன. அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது,” எனக் கோலாலம்பூரில் பொருளாதாரக் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறினார்.

அந்த நிகழ்வைப் பற்றிய செய்திகளை ஏழு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. விருந்தினர்கள் வெளியேறிய பற்றிய செய்தியை சைனா பிரஸ் மட்டுமே வெளியிட்டிருந்தது.

ஜோகூர் கூலாயில் நிகழ்ந்த அந்த விருந்தில் கலந்து கொண்ட 15,000 பேரில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் சுவா உரையாற்றிக் கொண்டிருந்த போது அங்கிருந்து வெளியேறியதாக சைனா பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

அது ஜோகூரில் மசீச-வுக்கு ஆதரவு மங்கி வருவதற்கான அறிகுறி அல்ல என தமது எஜமானரைத் தற்காத்துப் பேசிய கட்சித் துணைத் தலைவர் லியாவ் தியோங் லாய் கூறினார்.