‘நம்மிடையே பயங்கரவாதிகள் இருப்பதை ஹிஷாமுடின் ஒப்புக் கொள்கிறார்

‘பல பயங்கரவாதிகள்’ மலேசியாவுக்குள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப்பதாக உள்துறை அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த ‘பயங்கரவாதிகள்’ உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள் என அது தெரிவித்தது.

“அவர்கள் மலேசியாவை இடை மய்யமாக பயன்படுத்துகின்றனர். மலேசியாவை அவர்கள் இலக்காகக் கொண்டிருக்கவில்லை,” என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று நாடாளுமன்றத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அவர்களால் மலேசியாவுக்கு ஆபத்து மிகவும் குறைவாகவே இருப்பதாக அவர் சொன்னார். ஏனெனில் சந்தேகத்துக்குரிய நபர்களை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதே அதற்குக் காரணமாகும்.

மலேசியாவை அல்லது மலேசியர்களை அவர்கள் தங்கள் இலக்காகக் கொண்டால் அதிகாரிகள் அவர்களைப் பிடிப்பதற்குத் தயாராக இருக்கின்றனர்.

மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தால் அது பற்றி அந்த நாடுகளின் அரசாங்கங்களுக்குத் தகவல் கொடுக்கப்படும்.

ஆட்களைச் சேர்ப்பதற்கான தளமாக மலேசியாவை பயங்கரவாதிகள் பயன்படுத்தவில்லை என்பது இது நாள் வரையில் நடத்தப்பட்ட விசாரணைகள் காட்டியுள்ளதாகவும் ஹிஷாமுடின் சொன்னார்.

மேலும் விவரங்களைத் தர மறுத்து விட்ட அவர், அதிகாரிகள் அதனை ரகசியமாக வைத்திருக்க விரும்புவதாகச் சொன்னார். கண்காணிக்கப்படுகின்றவர்கள் தங்கள் தந்திரங்களை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய அது உதவும்.

லெபனானில் கைது செய்யப்பட்ட இருவரும் ‘பயங்கரவாதிகள்’

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறப்பட்ட இரு மலேசியர்கள் லெபானானில் கைது செய்யப்பட்டது குறித்து குறிப்பிட்ட ஹிசாமுடின் உண்மையில் அவர்கள் இருவரும் பயங்கரவாதிகள் என்றார்.

அந்நிய வேவு நிறுவனங்கள் உதவியுடன் மலேசிய அதிகாரிகள் அவர்களை அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மலேசியாவில் இருந்த போதும் வெளிநாடுகளில் தங்கியிருந்த போதும் அவர்கள் அல் காய்டா பயங்கரவாத கட்டமைப்புடன் அணுக்கமான தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

அல் காய்டா அமைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் லெபனான் அதிகாரிகள் 28 வயதான ராஸிப் முகமட் அரிபின், 21 வயதான ராஸின் ஷாஹார் முஸ்தாபா கமால் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இராணுவ நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்படுவதற்காக அவர்கள் இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.