மேயர் விவகாரத்தை நீதிமன்றம் கொண்டுசெல்ல எம்பிபிஜே திட்டம்

பெட்டாலிங் ஜெயா மாநகராண்மைக் கழகம்(எம்பிபிஜே) மேயர் முகம்மட் ரோஸ்லான் பணிமாற்றம் செய்யப்படும் விவகாரத்தை நீதிமன்றம் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளது.

நேற்று 24 எம்பிபிஜே கவுன்சிலர்களும் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தில் ஏகமனதாய் அம்முடிவு செய்யப்பட்டது. 

விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லும் பொறுப்பை கவுன்சிலர் கைருல் அன்வார் அஹ்மட் சைனுடின் தலைமையில் அமைந்த ஒரு குழுவிடம் ஒப்படைக்கக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக மலாய் நாளேடான சினார் ஹராபான் அறிவித்துள்ளது.

சிலாங்கூர் அரசு மேயரின் ஒப்பந்த காலத்தை நீட்டித்துள்ள போதிலும் அவரைப் பணிமாற்றம் செய்வது ஏன் என்று விளக்கம் கேட்டு எம்பிபிஜே, பொதுச்சேவைத் துறைக்குக் கடிதம் அனுப்பவிருப்பதாகவும்  கவுன்சிலர் டெரெக் பெர்னாண்டஸ் அச்செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
மேயர் மாநில அரசால் நியமனம் செய்யப்படுபவர் என்றும் எனவே அவரை மாநில அரசின் ஒப்புதலின்றி பணிமாற்றம் செய்தல் கூடாது என்றும் அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஒரு வழக்குரைஞருமான பெர்னாண்டஸ்(வலம்), பிஎஸ்டி முதலில் 24மணி நேர மாற்றல் உத்தரவைப் பிறப்பித்துவிட்டு பின்னர் அதை 30நாள் அறிவிக்கையாக (நோட்டீஸ்) மாற்றியது ஏன் என்றும் வினவினார்.

இம்மாதத் தொடக்கத்தில் ரோஸ்லானுக்கு 24மணி நேர பணிமாற்றல் உத்தரவு கொடுக்கப்பட்டு அவர் சிலாங்கூர் மாநில துணைச் செயலாளராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தத் திடீர் மாற்றம் மாநில அரசுக்கு வியப்பாக இருந்தது. தான் ஆலோசனை கலக்கப்படவில்லை என்று அது கூறியது.

அது, மாநில அரசை நிலைகுலைய வைக்கும் பிஎன் கூட்டரசு அரசாங்கத்தின் முயற்சியாக இருக்கலாம் எனச் சில கவுன்சிலர்கள் நினைக்கின்றனர்.

சிலாங்கூர் மந்திரி புசார், பிஎஸ்டி-யுடன் விவாதித்து முடிவுகாணும் வரை பணிமாற்ற உத்தரவை முடக்கி வைப்பதாக அறிவித்தார்.

ஆனால், புதிதாகப் பதவியேற்றுள்ள அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா, ரோஸ்லானின் பணிமாற்றம் திட்டப்படி நடக்கும் என்று கூறியுள்ளார். ஆனால், ஒரு மாதம் தாமதித்து அது நடப்புக்கு வரும் என்றார்.