ஈப்போ மருத்துவமனையின் சரும நோய் மருந்தக பகுதியின் கூரை சரிந்தது

ஈப்போ ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையின் நிபுணத்துவ மருந்தக வளாகத்தில் உள்ள சரும நோய் மருந்தக (dermatology clinic) பகுதியின் முன் கூரை இன்று காலை மணி 6.00 அளவில் சரிந்தது.

பாதுகாவலர் ஒருவர் கண்டு பிடித்த அந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தொலைபேசி, தகவல் தொடர்பு தொழில்நுட்ப கம்பிகளைக் கொண்ட பிவிசி குழாயின் எடையை அந்த கூரையால் தாங்க முடியவில்லை என மாநில சுகாதாரம், ஊராட்சி, பயனீட்டாளர் விவகாரம், சுற்றுச்சூழல், பொதுப் போக்குவரத்து, இஸ்லாம் அல்லாதவர் விவகாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் மா ஹாங் சூன் கூறினார்.

“அந்தக் கூரை மீண்டும் அமைக்கபட வேண்டும் என மருத்துவமனை வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் இன்றிரவுக்குள் பழுது பார்க்கும் பணிகள் முடிந்து விடும் என்றும் அவர் சொன்னார்.

மருத்துவமனை அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளும் என்றும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க மற்ற பகுதிகளிலும் சோதனைகள் நடத்தப்படும் என டாக்டர் மா மேலும் தெரிவித்தார்.

அவர் அந்த மருத்துவமனைக்கு வருகை அளித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

1994ம் ஆண்டு அந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. அது நிபுணத்துவ மருத்துவச் சேவைகளை கடந்த 18 ஆண்டுகளாக வழங்கி வருகின்றது.

18 ஆண்டுகள் முடிந்த போதிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என மா தெரிவித்தார்.

பெர்னாமா