மலேசியர்கள் தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு அதிகாரிகளிடம் போகாமல் எதிர்க்கட்சிகளிடம் செல்வதற்கு ‘நம்பிக்கை பிரச்னையே’ காரணம் என மலேசிய அனைத்துலக வெளிப்படை நிறுவனம் (Transparency International-Malaysia- TI-M ) கூறுகின்றது.
தகவல்களை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்புச் சட்டம் 2010 அமலாக்க நிறுவனங்களுக்குச் செல்லும் மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்குவதால் தகவல்களை வெளியிடுவோர் எதிர்விளைவுகளுக்கு பலியாகக் கூடிய சூழ்நிலை இப்போது காணப்படுகின்றது.
“அந்தச் சட்டத்தில் உள்ள பலவீனம் அது தான். அமலாக்க நிறுவனங்களுக்கு அப்பால் தகவல்களை அம்பலப்படுத்துவோருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமா என்பதே இப்போதைய கேள்வி ஆகும்,” என TI-M-ன் தலைவர் பால் லோ கூறினார்.
அதற்குப் பதில் அவர்கள் தகவல்களை அரசியல் கட்சிகளிடம் வழங்குகின்றனர். அமலாக்க நிறுவனங்கள் தங்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் என்றும் தங்கள் அடையாளம் தெரிவிக்கப்பட்டு விடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
“அத்துடன் தங்கள் புகார்கள் விசாரிக்கப்படும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லை,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது பால் லோ சொன்னார்.
மற்ற நாடுகளில் தகவல்களை அம்பலப்படுத்தும் மக்களுடைய புகார்களை ஏற்றுக் கொள்ள சுயேச்சை அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
“நாம் அமலாக்க நிறுவன நேர்மை ஆணையத்தை (EAIC)யை வைத்துள்ளோம். ஆனால் தகவல்களை தருவோர் தரும் புகார்களை ஏற்றுக் கொள்ள அதற்கு அதிகாரமில்லை.”
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன விவகாரத்தைப் போன்று ஒரு விவகாரத்துக்கு அரசியல் சாயம் பூசுவதற்கோ அல்லது விளம்பரம் தேடுவதற்கோ தகவல்களை அம்பலப்படுத்தக் கூடாது.
“என்எப்சி-க்கு மிக அளவுக்கு அதிகமாக அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. தகவல் அம்பலப்படுத்தப்பட வேண்டுமானால் அது ஒரே தடவையில் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அல்ல,” என்றார் பால் லோ.
என்எப்சி ஊழலை அம்பலப்படுத்தியவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட மாட்டாது என நாடாளுமன்றத்தில் சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.
அந்தத் தகவல் அம்பலப்படுத்தப்படுவதில் முன்னின்று செயல்பட்ட பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தகவல்களை அம்பலப்படுத்துவோர் அல்ல. மாறாக ‘தம்பட்டம் அடிப்பவர்’ என நஸ்ரி சொன்னார்.
அந்த என்எப்சி, அதன் இயக்குநர்கள் ஆகியோரது வங்கிப் பதிவுகளை அம்பலப்படுத்தியதற்காக 1989ம் ஆண்டுக்கான வங்கி, நிதி நிறுவனச் சட்டத்தின் கீழ் ராபிஸி மீதும் முன்னாள் வங்கி ஊழியர் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே என்எப்சி தலைவர் முகமட் சாலே இஸ்மாயில் மீது 1965ம் ஆண்டு நிறுவனச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்களும் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.