கொங்: அம்னோ இளைஞர்கள் ஒரேயடியாக ஏஇஎஸ்-ஸை நிராகரிக்கவில்லை

போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா, தானியக்க அமலாக்க முறை(ஏஇஎஸ்)  விவகாரத்தில் மாற்றரசுக் கட்சி சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் உயிர்களைப் பணயம் வைக்கக்கூடாது என்று கூறுகிறார்.

“பக்காத்தான் சாலைப் பாதுகாப்பை வைத்து அரசியல்  ஆடக்கூடாது.பிறகு, விபத்துகள் நிகழ்ந்தால் நாங்கள்தான் தேவையானதைச் செய்யவில்லை என்பார்கள்.

“நாங்கள் ஏதாவது செய்தால் அதை அரசியலாக்கி விடுவார்கள்.இது சாலையைப் பயன்படுத்துவோருக்கு நியாயம் செய்வதாகாது”. நேற்று கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் முதல்முறையாக தரையிறங்கிய இத்தியோப்பிய ஏர்லைன்சின் விமானத்துக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் கொங் செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மையில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், சிவப்பு விளக்கைமீறிச் செல்லும் மோட்டார் ஓட்டுனர்களைப் பிடிப்பதற்காக ஏஇஎஸ் கேமிராக்கள் பொருத்தப்படுவதை மாற்றரசுக் கட்சி ஆளும் பினாங்கு, கெடா, கிளந்தான், சிலாங்கூர் ஆகியவை தள்ளிவைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

ஏஇஎஸ் கேமிராக்கள் பொருத்துவதற்கு மாநில அதிகாரிகளின் ஒப்புதல் தேவை என்று லிம் கூறினார்.

ஏஇஎஸ் அமலாக்கத்தைத் தள்ளிவைக்க அம்னோ இளைஞர்களும் கோரிக்கை விடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டியதற்கு கொங், “அவர்கள் அதை நிராகரிக்கவில்லை. சிலவற்றுக்கு விளக்கம் கேட்டிருக்கிறார்கள்.

“அவர்கள் ஓரேயடியாக நிராகரிப்பதாக நான் எண்ணவில்லை. பக்காத்தான்கூட அம்முறை பற்றி விளக்கம் தருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது”, என்றார்.

அண்மைய அம்னோ செயலவைக் கூட்டத்தில் ஏஇஎஸ் அமலாக்கத்தைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

-பெர்னாமா

 

 

TAGS: