சிலாங்கூர் “மற்றொரு சாபா” ஆகலாம் என செனட்டர் அச்சம்

சிலாங்கூரில் புதிய வாக்காளர் எண்ணிக்கை திடீரென்று கூடியிருப்பது அம்மாநிலம் “இன்னொரு சாபாவாக” மாறலாம் என்று கவலைகொள்ள வைப்பதாக டிஏபி செனட்டர் பி.ராமக்கிருஷ்ணன் கூறுகிறார்.

சாபாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு நீலநிற அடையாளக் கார்ட் கொடுக்கப்பட்டு அவர்கள் ஆளும் கட்சி பலம் குன்றிய இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டார்கள்.இப்படி வந்து குடியேறியவர் எண்ணிக்கை இன்று சாபாவின் உள்ளூர் மக்கள் எண்ணிக்கையைவிடவும் அதிகமாகும்.

“நாட்டில், அதிலும் சிலாங்கூரில் சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர் மில்லியன் கணக்கில் இருப்பதைக் கண்டு” சாபாவில் ஏற்பட்டதுபோன்று சிலாங்கூரிலும் நடக்குமோ என்று சிலாங்கூர் மக்கள் அச்சம் கொண்டிருப்பதாக ராமக்கிருஷ்ணன் கூறினார்.

“ஹுலு சிலாங்கூரில் உள்ள குடியேறிகளை வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்றை அம்னோ எழுதியிருப்பதற்கு உறுதியான ஆதாரம் உண்டு.

“இது தவிர, இந்தோனேசியர்கள் உடனடி வாக்காளராகும் சம்பவங்களும் நிறைய நிகழ்ந்துள்ளன. இதற்கான ஆதாரங்களைக் காண்பிக்கும்போது  தேர்தல் ஆணையம் அதற்கு எதிராக மந்தமாக செயல்படுவதும் தேசிய பதிவுத்துறை வாயைத் திறக்காமல் இருப்பதும் மக்கள் கொண்டுள்ள கவலை நியாயமானதே என்பதை நிரூபிக்கின்றன”, என்று ராமக்கிருஷ்ணன் தெரிவித்தார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூரை எவ்வகையிலும் திரும்பக் கைப்பற்ற வேண்டும் என்று அம்னோ ஆதரவாளர்களிடம் அறைகூவல் விடுத்திருப்பதும் அதன் தொடர்பில் அம்னோவிடம் வெளிப்படும் நம்பிக்கை உணர்வும் மேலும் கவலைகொள்ள வைக்கின்றன.

2008இல், மாநிலத்தின் 56 தொகுதிகளில் 20-ஐ வென்றதுபோல் அல்லாமல் எதிர்வரும் தேர்தலில் 38 தொகுதிகளில் பிஎன் வெல்லும் என்று அம்னோ கூறிக்கொண்டிருப்பதாக ராமக்கிருஷ்ணன் கூறினார்.

“எனவே நாட்டின் 13 வது பொதுத்தேர்தல் மலேசிய வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக இருக்கும் எனப் பலரும் கவலை கொண்டிருக்கிறார்கள்”, என்றவர் எச்சரித்தார்.

“அம்னோ, தேர்தல் ஆணையம், தேசிய பதிவுத்துறை ஆகியவை ஒன்றுசேர்ந்து இந்தத் தேசத்துரோகச் செயலை, தேசியப் பாதுகாப்புக்கு எதிரான செயலைச் செய்து வருகின்றன.பிஎன் அரசுக்கு ஆதரவாக செயல்படுவதன்வழி அவ்விரண்டும் மலேசியா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பலியிட ஆயத்தமாகி விட்டன.”

மலேசியாவில் இந்தியர்களும் சீனர்களும் 40, 50 ஆண்டுகள் குடியுரிமைக்காகக் காத்திருக்கும்போது கூட்டம் கூட்டமாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக புகும் இந்தோனேசியர்கள் சில ஆண்டுகளில், ஏன் சில மாதங்களில்கூட குடியுரிமை பெற்றுவிடுகிறார்கள்.

“பிப்ரவரி 19-இலிருந்து 26வரை நடைபெற்ற முதலாவது மைடாப்டார் இயக்கத்தில் 15,000 பேர் விண்ணப்பம் செய்துகொண்டார்கள். அதில் 1,800 பேர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. ஆனால், சுமார் 100 நீலநிற அடையாளக் கார்டுகள்தான் வழங்கப்பட்டதாக அறிகிறேன்.

“அரசாங்கம் மைடாப்டார் இயக்கத்தைப் பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான இந்தோனேசியர்களுக்குக் குடியுரிமை வழங்குகிறது. அதன்பின் சில நிமிடங்களில் அவர்கள் வாக்காளர்கள் ஆகிவிடுகிறார்கள்”, என்று ராமக்கிருஷ்ணன் கூறிகொண்டார்.

மக்கள் அமைதியாக ஒன்றுகூடும்போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் பயன்படுத்தும் போலீசார் இந்தத் தேசத்துரோகச் செயலுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை என்றார்.

“அம்னோ/பிஎன்னின் செயல் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள எதைச் செய்வதற்கும் அவர்கள் ஆயத்தமாக இருப்பதை காண்பிக்கிறது.

“இதற்கு இடமளித்தால் மலேசியர்கள் அவர்களின் நாட்டை  என்றென்றும் வெளிநாட்டவரிடம் பறிகொடுத்து விடுவர். மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஆட்சியில் இருக்க வெறிகொண்டிருக்கும் பொறுப்பற்றவர்களிடமிருந்து நாட்டைக் காக்க மலேசியர்கள் வீறுகொண்டெழ வேண்டும்”, என்று செனட்டர் மேலும் கூறினார்.