பக்காத்தான் மெகா பேரணிக்கு 15 அரசு சாரா அமைப்புக்கள் ஆட்சேபம்

சிரம்பானில் நாளை நடத்தப்படவிருக்கும் பக்காத்தான் மெகா பேரணிக்கு எதிராக 15 அரசு சாரா அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பேரணியை ரத்துச் செய்யுமாறு அவை ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டன.

அந்த அமைப்புக்களில் GMPN என்ற மலேசிய தேசிய போராளிகளை கௌரவிக்கும் அமைப்பு, செனாவாங் மாநிலச் சட்டமன்றத் தொகுதி  இளைஞர்கள் அமைப்பு, பெக்கிடா என்னும் இஸ்லாமிய பிரச்சார நலன் அமைப்பு ஆகியவையும் அடங்கும்.

“நாங்கள் தெரு அரசியலை ஆதரிக்கவில்லை”, “நாங்கள் அமைதியை நேசிக்கிறோம்” என்று கூறும் பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்திருந்ததோடு நாட்டுப் பற்று பாடல்களையும் பாடினார்கள்.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக பக்காத்தான் பேரணி ரத்துச் செய்யப்பட வேண்டும் எனக் கோரும் புகார் ஒன்றை செனாவாங் போலீஸ் நிலையத்தில் அந்த அமைப்புக்களின் 20 பேராளர்கள் சமர்பித்தனர்.

பக்காத்தான் திட்டமிட்டபடி பேரணியை நடத்துமானால் அது 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறியதாகி விடும். காரணம் பேரணி ஏற்பாட்டாளர்கள் விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யவில்லை என சிரம்பான் ஒசிபிடி சைபுல் அஸ்லி கமாருதின் கூறியுள்ளது அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்படி அந்தப் பாரத்தை பூர்த்தி செய்வதற்கு போலீசார் ஏற்பாட்டாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர் என்றும் அவர்கள் பதில் அளிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

போலீசார் எச்சரித்த போதிலும் சிரம்பானுக்கு தென் கிழக்கில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமான் சிரம்பான் ஜெயாவில் காலி நிலம் ஒன்றில் நாளை மாலை மணி 4.00 தொடக்கம் நள்ளிரவு வரை நடத்தும் திட்டத்தை தொடருவதற்கு பக்காத்தான் முடிவு செய்துள்ளது.

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு மாநிலத்திலும் விளக்கக் கூட்டங்களை நடத்த பக்காத்தான் எண்ணியுள்ளது. சிரம்பான் அதில் முதலாவது விளக்கக் கூட்டமாகும். அதில் 50,000 பேர் வரையில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘மக்கள் எழுச்சிக் கூட்டம்’ என அழைக்கப்படும் அந்தப் பேரணியின் போது லினாஸ் அரிய மண் தொழில் கூடம், ஜோகூர் பெங்கெராங் பெட்ரோலிய மய்யம், பெர்சே விடுத்துள்ள தேர்தல் சீர்திருத்தக் கோரிக்கைகள், கிளந்தான் அரசாங்கத்தின் எண்ணெய் உரிமப் பணக் கோரிக்கை ஆகியவை எழுப்படும் விஷயங்களாகும்.