டெங்: சிலாங்கூர் டிஏபி ஆண்டுக்கூட்டத்துக்குக் கடைசிநேரத்தில்தான் அழைப்பு வந்தது

சிலாங்கூர் டிஏபி உதவித் தலைவர் டெங் சாங் கிம், நேற்று நடந்த மாநிலக் கட்சி ஆண்டுக்கூட்டத்துக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு கிடைத்தது என்று கூறுகிறார்.

“ஒரு நாளுக்கு முன்னதாகத்தான் எஸ்எம்எஸ்(குறுஞ்செய்தி) கிடைத்தது. ஏற்பாட்டுச் செயலாளர் (லாவ் வெங் சான்)  முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை”, என்றாரவர்.

அது தாமதமாகக் கிடைத்ததால் தம் தொகுதியில் தாம் கலந்துகொள்ளவிருந்த இரு நிகழ்வுகளை இரத்து செய்ய இயலவில்லை என்றவர் சொன்னார். அவற்றில் ஒன்று மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. பாஸ் பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டார்கள்.

“அதில் கலந்துகொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தேன். கொடுத்த வாக்கை மீற முடியவில்லை”, என்றார். 

உதவிச் செயலாளர் இங் சுவி லிம்முக்கும் தாமதமாகத்தான் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் கூட்டத்துக்கு நேரம் கழித்துத்தான் சென்றிருக்கிறார் என டெங் கூறினார்.

1,153 பேராளர்களில் 311பேர்தான்-26.97 விழுக்காட்டினர்- கூட்டத்துக்கு வந்தார்கள்.இது கூட்டம் நடத்த குறைந்தபட்சத் தேவையான  25 விழுக்காட்டுக்குச் சற்று அதிகம், அவ்வளவுதான்.

குறைந்த எண்ணிக்கையினர் கூட்டத்துக்கு வந்தது பற்றி சிலாங்கூர் டிஏபி தலைவர் தெரெசா கொக்கிடம் செய்தியாளர் கூட்டத்தில் வினவப்பட்டது.

“குறைந்த எண்ணிக்கையா? இதை எப்படி குறைந்த எண்ணிக்கை என்று சொல்ல முடியும்?”, என்று திருப்பிக் கேட்டார்.

எந்தக் கட்சியானாலும் கட்சித் தேர்தல் இல்லை என்றால் அதன் ஆண்டுக்கூட்டத்துக்கு வருவோர் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் என்றவர் விளக்கினார்.

சிலாங்கூர் மசீச ஆண்டுக்கூட்டத்தில்கூட அப்படித்தான் இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

“அத்துடன் நேற்று(சனிக்கிழமை) டிஏபி சோசலிஸ்ட் இளைஞர்களின் தேர்தல் தினம். இப்படிப் பல காரணங்கள் இருக்கலாம்”.

டெங் ஏன் கூட்டத்துக்கு வரவில்லை என்று வினவியதற்கு. “அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். ஒரு வேளை அதிக வேலை இருந்திருக்கலாம். எனக்கென்ன தெரியும்?”, என்றார்.

மாநிலக் கட்சியில் போட்டி அணிகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் கட்சி திருத்தி அமைக்கப்பட்டிருப்பதாக தெரெசா கொக் கூறினார்.

நிர்வாகத்தில் குளறுபடி’

2010 கட்சித் தேர்தலில் கொக்கும் அவரது ‘ஒற்றுமை அணியும்’ எட்டுக்கு-ஏழு என டெங்கின் ‘வானவில் அணியை’த் தோற்கடித்தனர். தேர்தலுக்குப் பின்னர் இருவரும் ஒன்றுபட்டு பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

ஆனாலும், டெங் தாம் உதவித் தலைவர் என்றாலும்கூட தலைமைத்துவ அமைப்பில் தாம் ஒரு பகுதி அல்ல என்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் என்ன செய்யப்படுகிறது என்பதுகூட தமக்குத் தெரியாது என்றார்.

தாம் கலந்துகொண்ட மாநிலத் தலைமைக் கூட்டத்தில் தேர்தல் விவகாரம் பற்றியும் வேட்பாளர் பற்றியும் விவாதிக்கப்பட்டதில்லை என்றவர் சொன்னார்.

“வேட்பாளர்களை அடையாளம் காணவும், திட்டங்கள் வியூகங்கள் வகுக்கவும் இதுதான் தருணமாகும்”, என்று குறிப்பிட்ட டெங், ஆனால் செயலவை “சாதாரண விவகாரங்களில்” கவனம் செலுத்துகிறது என்றார்.

“நிர்வாகத்தில் குளறுபடி…..என்ன செய்கிறார்கள் அவர்கள்?”, என்றவர் வினவினார்.

அதனால்தான், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு கூட்டங்களுக்குத் தாம் செல்லவில்லை என்றும் கூறினார்.

தம் கூற்று கட்சி மன ஊக்கத்தைக் கெடுத்துவிடும் என்று கூறப்படுவதை மறுத்தார். பொதுத் தேர்தலைச் சந்திக்க தயராக இருப்பதாகவும் சொன்னார்.

கொக்குடன் ஒத்துழைப்பாரா என்ற கேள்விக்கு, “பொது விவகாரங்களில்”ஒத்துழைக்கத் தயார் என்றார்.