சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க தானியக்க அமலாக்கமுறை(ஏஇஎஸ்)- யுடன் போலீசும் அஞ்சல்வழி சம்மன்கள் கொடுக்கும் பணியைத் தொடர்வார்கள்.
“போலீசார் அவர்களின் (நடமாடும்) கேமிராக்களைக் கொண்டிருப்பார்கள். சாலைப் போக்குவரத்துத்துறை புதிய அணுகுமுறை (ஏஇஎஸ்)-யைக் கொண்டிருக்கும்”என உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசுப் (இடம்) இன்று கேள்வி நேரத்தின்போது மக்களவையில் கூறினார்.
“சாலை விபத்துகள் அதிகம் நிகழ்வதால், போக்குவரத்துக் குற்றங்களைக் கண்காணிக்கும் எல்லாத் துறைகளும் அவற்றின் பணியைத் தொடர்வதுதான் நல்லது”.
ஒரே நேரத்தில் இரண்டு முறைகளும் செயல்படுமா என்று முகம்மட் பிர்டுஸ் ஜப்பார் (பாஸ்-ஜெராய்) கேட்டிருந்த துணைக் கேள்விக்கு அபு செமான் அவ்வாறு பதிலளித்தார்.
அப்போது போங் போ குவான் (வலம்) எழுந்து நின்று கூடுதல் கேள்வி ஒன்று கேட்பதற்கு அனுமதி கோரினார்.
அப்படிப்பட்ட நேரத்தில் ஒரே குற்றத்துக்கு இரு சம்மன்கள் கொடுக்கப்படும் சாத்தியம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
பின்னர், அவைக்கு வெளியில் பேசிய போங், சாலையைப் பயன்படுத்துவோருக்கு ஒரே குற்றத்துக்காக ஏஇஎஸ் ஒரு சம்மனையும் போலீஸ் ஒரு சம்மனையும் வழங்கலாம் என்று விளக்கினார்.
“விபத்துகள் அடிக்கடி நடப்பதாக போலீஸ் அடையாளம் காட்டிய இடங்களில்தான் ஏஇஎஸ் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன”, என்று கூறியவர் போலீசும் அந்த இடங்களில்தான் அவர்களின் கேமிராக்களை வைத்திருப்பார்கள் என்றார்.
பிர்டுஸின் பிரதான கேள்விக்கு விடையளித்த துணை அமைச்சர், ஹரி ராயா அய்டில்பிட்ரி விடுமுறையின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் செலாமாட் நடவடிக்கையின்கீழ் மொத்தம் 61,191 சம்மன்கள் சாலைப் பயனர்களுக்கு அஞ்சல்வழி அனுப்பப்பட்டதாகக் கூறினார்.
ஏஇஎஸ்-ஸுடன் போலீஸ் கேமிராக்களும் பயன்படுத்தப்படுவதால் “பிடிபடுவோம்” என்ற பயமும் உணர்வும் அதிகரிக்கும், அது விபத்துகள் குறைய உதவும் என்றாரவர்.