பாரிசான் நேசனல் இளைஞர் பகுதி, கட்சி வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது அல்லது பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறது.
இதனைத் தெரிவித்த அதன் தலைவர் கைரி ஜமாலுடின் ஆனால், எல்லாத் தொகுதிகளுக்கும் அவ்வாறு செய்வது சாத்தியப்படாது என்றும் குறிப்பிட்டார். சில இடங்களில் உள்கட்சி விவகாரங்களும் வேறு சிக்கல்களும் இருக்கலாம்.
“தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்னதாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு நாள் முன்னதாக அல்லாமல் இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதத்துக்கு முன்னதாக அறிவிப்பது நல்லது”.
பெர்னாமாவிடம் பேசிய கைரி, பிஎன் ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களின் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
முந்திய தேர்தல்களில் நடந்ததுபோல் அல்லாமல் எதிர்வரும் தேர்தலில் பிஎன் வேட்பாளர்களின் பெயர்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படலாம் என்பதை பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரும் அக்டோபர் 26–இல் குறிப்பிட்டிருந்தார்.