‘கிறிஸ்துவ சார்புடைய அன்வார்’ துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டன

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பல்வகை சமயத்தன்மையை நம்புகின்றவர், கிறிஸ்துவத் தலைவர்களுடன் அணுக்கமான உறவுகளைக் கொண்டுள்ளவர் எனக் கூறிக் கொள்ளும் பல மர்ம துண்டுப் பிரசுரங்கள் சிலிம் ரிவரில் இன்று விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

நாளை அன்வார் அங்கு செராமா ஒன்றில் பேசவிருக்கும் வேளையில் அவை விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

மலாய் மொழியில் எழுதப்பட்டுள்ள அந்தத் துண்டுப் பிரசுரங்கள் பெரும்பாலும் உணவுக் கடைகளிலும் சந்தைக் கூடங்களிலும் காணப்பட்டதாக பிகேஆர் மகளிர் நிர்வாக மன்ற உறுப்பினர் சுவா யீ லிங் கூறினார். தங்களது அஞ்சல் பெட்டியில் அவை கிடந்ததாக சில கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

“அன்வாரைக் களங்கப்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் சிலிம் ரிவர் நகர மய்யத்தில் எல்லா இடங்களிலும் காணப்பட்டன. அவற்றை யார் விநியோகம் செய்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.

அவற்றில் மிகவும் கவர்ச்சிகரமானது எட்டுப் பக்கங்களில் முழு வண்ணத்திலான ‘அன்வார் இப்ராஹிம் & சமய பல்வகைத் தன்மை ( ‘Anwar Ibrahim & Pluralisme Agama ) என்னும் தலைப்பைக் கொண்ட துண்டுப் பிரசுரமாகும்.

சபாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது தனியார் ஜெட் விமானம் ஒன்றை அன்வார் பயன்படுத்தியதையும் பிகேஆர் பிரச்சார வாகனம், பஸ் ஆகியவற்றையும் மற்ற துண்டுப் பிரசுரங்கள் தாக்கின. “அன்வார் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு மக்களை ஏமாற்றுவதாக” அவை கூறிக் கொண்டன.

நாளை இரவு சிலிம் ரிவர் மக்களிடையே அன்வார் உரையாற்றவிருப்பதின் தொடர்பில் அந்தத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சுவா நம்புகிறார்.

“பொது மக்களைப் பயமுறுத்தி பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக அது செய்யப்படுகின்றது,” எனக் கூறிய அவர் செராமைவை விளம்பரப்படுத்தும் பொருட்டு தஞ்சோங் மாலிமைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த 12 பதாதைகளில் இரண்டு காணாமல் போய் விட்டதாகவும் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அன்வார் எதிர்ப்பு பிரிவு எத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்தினாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மக்கள் செராமாவுக்கு வந்து அன்வார் பேசுவதை செவிமடுப்பார் என அவர் உறுதியாக நம்புகிறார்.

பிற்பகலில் போலீசில் புகார் செய்யப்படும் என்றும் நாளைய நிகழ்வுக்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும் சுவா தெரிவித்தார்.

சிலிம் ரிவரில் நாளை இரவு தேவான் தொக்கோங் காய் கீ தெங் மண்டபத்திலும் அதனைத் தொடர்ந்து சபா பெர்னாமில் டாத்தாரான்  Tanah Lesen Parit Baru-விலும் அன்வார் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.