சர்ச்சைக்கு இலக்காகி உள்ள போக்குவரத்துக் குற்றங்களுக்கான இயல்பான அமலாக்க முறைக்கு (AES) குத்தகை கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்று ஜோகூர் அம்னோவுடன் தொடர்புடையது என்பது மலேசிய நிறுவன ஆணையப் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சியான பிகேஆர் கூறுகின்றது.
“அந்த AES குத்தகை நிறுவனங்களில் ஒன்றின் பெரிய பங்குதாரர் ஒருவருக்கு ஜோகூர் அம்னோவுடன் மிக அணுக்கமான தொடர்பு உள்ளது,” என பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினர் சாங் லி காங் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
ஜோகூரில் பிரபலமான இரண்டு அம்னோ அரசியல் பிரமுகர்களுடைய குடும்பங்களுக்கு இடையில் திருமண பந்தம் ஏற்பட்ட பின்னர் பிறந்த பிள்ளைகளில் மூத்தவர் கேள்விக்குரிய நபர் என அவர் கூறிக் கொண்டார்.
அவரது தந்தை தொகுதி ஒன்றின் தலைவர் ஆவார். தாயார் ஜோகூர் அம்னோ மகளிர் பிரிவு துணைத் தலைவி ஆவார்.
அவருடைய பெற்றோர்களும் நெருங்கிய உறவினர் ஒருவரும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் என்றார் அவர்.
“நிறுவனத்தின் பெரிய பங்குதாரருக்கும் அம்னோவுக்கும் உள்ள தொடர்புகள், நண்பர்களுக்கு உதவும் போக்கிற்கு இன்னொரு எடுத்துக் காட்டு ஆகும்.”
“அது நண்பர்களுக்கு உதவும் போக்கு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட துறையில் எத்தகைய நிபுணத்துவமும் இல்லாத “செயல்படாத நிறுவனம்” ஒன்றுக்கு இவ்வளவு ஆதாயகரமான AES குத்தகை வழங்கப்பட்டுள்ளதை வேறு என்ன சொல்வது ?” என அவர் தொடர்ந்து வினவினார்.