ஜைட் பக்காத்தான் வேட்பாளரா? ஆச்சரியத்தில் பிகேஆர்

பார்டி கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம் எதிர்வரும் போட்டியில் பக்காத்தான் ரக்யாட் சார்பில் போட்டியிட விருப்பம் கொண்டிருப்பது அறிந்து ஆச்சரியமடைகிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில். 

அத்துடன் ஜைட், ஈராண்டுகளுக்குமுன் தாமே நிறுவிய கித்தா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியது ஏன் என்பதும் சைபுடினுக்குப் புரியவில்லை. இப்போது அவர் கட்சி செயலவை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார்.

ஜைட்(இடம்) தம் எண்ணத்தைப் பக்காத்தானுக்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை அதனால் அக்கூட்டணியின் தலைவர் மன்றத்தில் அது பற்றி விவாதிக்கப்படவில்லை.

“பக்காத்தான் சார்பில் போட்டியிடும் விருப்பத்தை அவர் எங்களுக்கு எழுதவோ தெரிவிக்கவோ இல்லை”, என்று சைபுடின் கூறினார்.

முறைப்படி கேட்டுக்கொண்டால் மட்டுமே தலைவர் மன்றம் அதன்மீது முடிவெடுக்கும்.

ஜைட் கித்தா கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாகவும் அவர் பக்காத்தான் சார்பில் பெக்கானில் போட்டியிட விருப்பம் கொண்டிருக்கிறார் என்றும் நேற்றைய ஸ்டார் நாளேடில் செய்தி வெளிவந்திருந்தது. பெக்கானில் போட்டியிடுவது பற்றி பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் (வலம்) கும் ஆலோசித்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது..

கித்தா நீண்டநாள் நிலைத்திருக்காது

1999-இல், பெக்கானில் போட்டியிட்ட பாஸ் சுமார் 200 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றது.

2004-இலும் 2008-இலும் பிகேஆர் அங்கு போட்டியிட்டது. ஆனால், வெற்றி பெறவில்லை.

“இப்போதைய நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றால் பெக்கானில் பிகேஆர்தான் மீண்டும் போட்டியிடும்”, என்று சைபுடின் தெரிவித்தார்.

ஜைட் கித்தா தலைவர் பதவியிலிருந்து விலகியது “எதிர்பாராதது” என்று குறிப்பிட்ட  சைபுடின் (இடம்) அக்கட்சியால் நீண்டநாள் தாக்குப்பிடிக்க முடியாது என்றார்.

உடல்நலம் சரியில்லை  என்பதால் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஜைட் த ஸ்டாரிடம் கூறினார்.

தலைமைச் செயலாளர்  மஸ்ரும் டாயாட் இப்போது அதன் தலைவராக உள்ளார்.

முன்னாள் அமைச்சரான ஜைட், அமைச்சர் பதவியைத் துறந்த பின்னர் பிகேஆரில் சேர்ந்தார். அங்கு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றதை அடுத்து அதிலிருந்தும் விலகினார். கட்சித் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.