அஹ்மட் இரண்டாம் தடவை கைது செய்யப்பட்டது நீதிமன்ற நடைமுறையை அவமதிக்கும் செயல்

முகநூலில் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் வெள்ளிக்கிழமை தடுத்து வைக்கப்பட்ட அஹ்மட் அப்ட் ஜாலில், நேற்று விடுவிக்கப்பட்டு மறுபடியும் கைது செய்யப்பட்டார்.

இரண்டாவது தடவை அவர் கைது செய்யப்பட்டது, “ஒரு மிரட்டல் என்பதுடன் நீதிமன்ற நடைமுறைகளை அவமதிக்கும் செயலுமாகும்” என்று அவரின் வழக்குரைஞர் பாடியா நட்வா பிட்ரி கூறியுள்ளார்.

ஜோகூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்ததற்காக அவர்மீது அரச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. முதலில் ஜோகூர் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவர் மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

ஜோகூரில் செய்யப்பட்ட மூன்று புகார்களின்பேரில் போலீஸ் அஹ்மட்டைக் (இடம்) கைது செய்திருந்தது.

அஹ்மட் இன்று மீண்டும் நீதிமன்றம் கொண்டு செல்லப்படுவார் என்று பாடியா கூறினார். மலேசிய தொடர்பு, பல்லூடக சட்டத்தின்கீழ் அவர் குற்றமிழைத்ததாக ஒரு புதிய குற்றச்சாட்டை சுமத்தி அவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைக்க அனுமதிகேட்டு போலீஸ் நீதிமன்றத்திடம் மனு செய்திருக்கிறது என்றாரவர்.

அஹ்மட் வழக்குரைஞர்களை அமர்த்தினார் அதனால்தான் அவர் மறுபடியும் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்களாம்.

“இது ஒரு வகை மிரட்டலாகும். கூட்டரசு அரசமைப்பை மீறும் செயலுமாகும்”, என்று பாடியா குறிப்பிட்டார்.

“அரசமைப்பின் பகுதி 5(3), ஒருவர் வழக்குரைஞரை அமர்த்திக்கொள்ள உரிமை வழங்குகிறது. ஆனால், வழக்குரைஞரை வைத்துக்கொண்டால்  கைது செய்யப்படுகிறார்கள், இங்கென்ன போலீஸ் அராஜகம் நடக்கிறதா?, என்றவர் வினவினார்.

கைதுக்குக் காரணம் கூறப்படவில்லை

ஜோகூர் நீதிமன்றத்தில் அவரை நிறுத்தி  மேலும் சில நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க அனுமதி கோரியது நிராகரிக்கப்பட்டது.

போலீஸ் அவரை அங்கு கொண்டுவந்ததே முறையல்ல என்று மெஜிஸ்ட்ரேட் கூறினார். மூன்று நாள் காவலில் வைத்திருந்தாலும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அவர் பதிவிட்டதில் அவமதிக்கும் வகையில் அமைந்தது எது? அவரைச் சந்திக்க அவரின் குடும்பத்தார் அனுமதிக்கப்படவில்லை. அவர் இருக்கும் இடம், விசாரணை அதிகாரி யார் போன்ற விவரங்களும்  தெரிவிக்கப்படவில்லை”, என்று பாடியா குறிப்பிட்டார்.

மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராமில் உள்ள ஒரு வழக்குரைஞரான பாடியா, அஹ்மட்டின் பாதுகாப்பு குறித்து வங்சா மாஹுவில் உள்ள அவரின் குடும்பம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாகக் கூறினார்.

அஹ்மட்டின் விடுதலைக்குக் கோரிக்கை விடுத்து நாளை இரவு டாட்டாரான் மெர்டேகாவில் மெழுகுதிரி ஏந்திய கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.