போலீஸ் கைதியான ஏ குகனுக்கு காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீஸ்காரர் ஒருவர், தமக்கு விருப்பமில்லாமல் இருந்தும் தம்மை முன்னாள் சுபாங் ஜெயா ஒசிபிடி பலிகடாவாக்கி விட்டதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
குகனின் தாயார் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் போலீஸ் தடுப்புக் காவல் மரண வழக்கில் சாட்சியமளித்த முதலாவது பிரதிவாதித் தரப்புச் சாட்சியான 32 வயது வி நவிந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.
குகன் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பில் தடுப்புக் காவல் ( lock-up rules ) விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் சொன்னார்.
கடந்த ஜுன் மாதம் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி முற்பகல் மணி 11.40 வாக்கில் குகன் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாக கூறப்பட்ட வேளையில் தாம் கடமையில் இல்லை என்றும் நவிந்திரன் சொன்னார்.
“நான் அன்றைய தினம் நண்பகல் தொடக்கம் மாலை 4 மணி வரையில் வேலை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் குகன் Detective Korporal Silvem, Lans Koperal Sani (முழுப் பெயர் குறிப்பிடப்படவில்லை) ஆகியோரது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். ஆகவே குகனுக்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.”
“நான் அன்றைய தினம் முன் கூட்டியே வேலைக்கு வந்து விட்டேன். சில்வமும் சானியும் குகனை விசாரித்துக் கொண்டு காவல் புரிந்து கொண்டிருந்ததை பார்த்தேன். திடீரென பீதி அடைந்தவரைப் போலக் காணப்பட்ட சில்வம் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாக குகன் புகார் செய்வதால் அவருக்கு மருத்துவ உதவியை நாடுவதற்கு ஏஎஸ்பி ரோட்னியை கண்டு பிடிக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்”, என அவர் தமது வழக்குரைஞர் ரமேஷ் சிவகுமார் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த போது கூறினார்.
ரோட்னியின் அனுமதியைப் பெற்ற பின்னர் தாம் அருகில் உள்ள மருந்தகம் ஒன்றுக்குச் சென்று மருத்துவர் ஒருவரை அழைத்து வந்தேன். அவர் குகன் மரணமடைந்து விட்டதை உறுதி செய்தார்.
2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் குகனைக் கண்காணித்ததிலும் காவலில் வைத்திருந்ததிலும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் அனைவரையும் சுபாங் ஜெயா ஒசிபிடி (காலஞ்சென்ற) ஏசிபி ஜைனல் ரஷிட் அபு பாக்கார் அழைத்தார் என நவிந்திரன் மேலும் தெரிவித்தார்.
“அந்த விவகாரத்தில் எங்களில் யார் பலிகடாவாக்கப்படுவது என்பதை உறுதி செய்வதற்காக அந்தக் கூட்டம் நிகழ்ந்தது. இறுதியாக என் விருப்பம் இல்லாமல் நான் பலிகடாவாக தேர்வு செய்யப்பட்டேன்”, என்றார் அவர்.
தைப்பான் யுஎஸ்ஜே போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்குரியவர்களை 10க்கும் குறையாத நபர்கள் சந்தித்துள்ளனர் என்று அவர் விளக்கமளித்தார்.
‘தைப்பான் போலீஸ் நிலையத்தில் தடுப்பு மய்யம் (lock-up) இல்லை’
குகன் ஜனவரி 15ம் தேதி கைது செய்யப்பட்டது முதல் அதிகாரிகள் மாற்றி மாற்றி தொடர்ந்து அவரை விசாரணை செய்ததாக நவிந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
தைப்பான் போலீஸ் நிலையத்தில் தடுப்பு மய்யம் இல்லாததால் டி9 (கடுங்குற்றங்கள் பிரிவு) பிரிவைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் அங்கு வந்து போக முடியும். அவர்கள் குகனை அணுகவும் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
சந்தேகத்துக்குரிய நபர்களுக்கு உணவும் பானங்களும் வழங்குவது பொறுப்பில் உள்ள போலீஸ்காரரின் விருப்பத்தையும் அனுதாபத்தையும் பொறுத்தது என்றும் சில வேளைகளில் சொந்தப் பணத்தைச் செலவு செய்து வாங்கிக் கொடுப்பதும் உண்டு என்றும் அவர் சொன்னார்.
தடுப்பு மய்யம் இல்லாத எந்த போலீஸ் நிலையத்திலும் உணவுப் பொருட்களோ பானங்களோ தயாரிக்கப்படுவதில்லை. எங்கள் மேலதிகாரிகளுக்கு அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பிரச்னையைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்று அவர் சொன்னார்.