ஊடகங்கள் மோசமானவை என்கிறார் சைட் மொக்தார்

தம்மை மோசமானவராகச் சித்திரித்துக் காட்டுவதே ஊடகங்களுக்கு வாடிக்கையாக போய்விட்டது என்று பிரபல தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்புகாரி முதன்முதலாக வெளிவந்திருக்கும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலில்  கூறியுள்ளார்.

நூலின் ஆசிரியர் பிரமீளா மோகன்லால். நூலாசிரியரின் பிவிஎம் கம்முனிகேசன்ஸ் நிறுவனமே அதை வெளியிட்டிருக்கிறது.

“எத்தனையோ பேர் அதிகார அமைப்பை தப்பாக பயன்படுத்திக்கொண்டு சுய ஆதாயம் பெறும்போது என்னப் பற்றி மட்டும் தப்புத் தப்பாகச் சொல்வது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதை எதிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்”, என்று சைட் மொக்தார் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார அமைப்பைத் தப்பாக பயன்படுத்திக்கொள்வோர் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

பிரமீளா மோகன்லால், சைட் மொக்தாரின் தொழில்முன்னேற்றத்துக்கு டாக்டர் மகாதிர்தான் காரணம் என்று ஊடகங்கள்  அடிக்கடி குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கு அத்தொழில் அதிபரின் பதில்: “1997-இல் நான் மகாதிரைச் சந்திக்கும் முன்பே தொழிலில் வெற்றி பெற்றிருந்தேன். அவருடனான உறவை நான் என்றும் தப்பாக பயன்படுத்திக்கொண்டதில்லை.”

மொக்தாரின் முன்னேற்றத்துக்கு அவருக்குக் கிடைத்த அரசாங்கக் குத்தகைகள்தாம் காரணம் என்று ஒரு வதந்தி உண்டு. தகுதி இல்லாத நிலையிலும் அவருக்குக் குத்தகைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டதுண்டு.

நூலை வாசிக்கையில் மகாதிரும் மொக்தாரும் ஒருவர் முன்னேற்றத்தை மற்றவர் வெகுவாகக் கண்டு இரசித்ததாகத் தெரிகிறது. மகாதிர் 1972-இல் லாரி போக்குவரத்துத் தொழிலை சைட் மொக்தார் தொடங்கிய காலத்திலிருந்து அவரைக் கவனித்து வந்திருக்கிறார். “சைட் மொக்தாருக்கு இயல்பாகவே தொழிலில் நாட்டம் இருக்கிறது. எதையும் விரைவாகக் கற்றுக்கொள்கிறார். அவர் புதிய பொருளாதாரக் கொள்கையின் வெற்றிக்கு ஓர் அடையாளம்”, என்று பாராட்டியுள்ளார் மகாதிர்.

வங்கிகளில் நம்பிக்கை உண்டு

இன்று புதிய பொருளாதாரக் கொள்கையால் பயனடைந்துள்ள மலாய் தொழில் அதிபர்களில் மிகவும் பிரபலமானவராக விளங்குகிறார் சைட் மொக்தார்.

இந்த நூல் அவரைப் பற்றிய நல்ல விசயங்களை எடுத்துக்கூறுகிறது. அவரது தொழில் எப்படியெல்லாம் விரிவடைந்தது என்பதை விவரிக்கிறது.

எம்எம்சி, பெர்னாஸ், டிஆர்பி-ஹைகோம் போன்றவை எளிதாக அவரது கைக்கு வந்ததாகக் கூறப்படுவதைக் கேட்டு அவர் மனவேதனை அடைகிறார். “அவற்றைப் பெறுவதற்கு நான் எவ்வளவு கடுமையாக போராட வேண்டியிருந்தது என்பதை அவர்கள் உணர்வதில்லை”, என்கிறார்.

பில்லியன் கணக்கில் கடன் வாங்கியிருப்பதால் அவர் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் பல வங்கிகள் நொடித்தும் போகும் என்ற வதந்திகூட உலவுகிறது. ஆனால், சைட் மொக்தார் அதை நிராகரிக்கிறார்.

“வங்கிகளுக்கு என்மீது நம்பிக்கை உண்டு. கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு எங்களிடம் சொத்துகள் உண்டு”, என்கிறார்.

நூலின் ஏழாம் அத்தியாயம் பரிவுள்ளம் கொண்டவராக சைட் மொக்தாரைச் சித்திரிக்கிறது.

அவர் கூறுகிறார்: “அறச்செயல்களைச் செய்யும்போது இதயப் பூர்வமாக செய்கிறேன். ஒரு பெரிய நிறுவனத்தின் சமூகப் பொறுப்பாக நினைப்பதில்லை. பரிவினால் செய்கிறேன். அது என் இதயத்திலிருந்ந்து வருவது. பணம் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும். அதுவே என் விருப்பம்.”