ஜைட்: “பெக்கானில் போட்டியிட நானே பொருத்தமான வேட்பாளன்”

கித்தா கட்சியின் முன்னாள் தலைவர் ஜைட் இப்ராகிம், பெக்கானில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்த்துப் போட்டியிட தாமே பொருத்தமான வேட்பாளர் என்று கூறிக்கொள்வது ஏன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதேவேளை, தம்மை அங்கு பக்காத்தான் ரக்யாட் வேட்பாளராக நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

“சிலர் கூறுவதுபோல் நான் ஒன்றும் போட்டியிட இடம் தேடி அலையவில்லை. அத்துடன் நான் பிகேஆரிடமோ வேறு எந்த மாற்றரசுக்கட்சியிடமோ அதன் வேட்பாளராக பெக்கானில் களமிறங்க அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருப்பதாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை”, என்று  ‘Zaid Untuk Rakyat’என்னும் வலைப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முன்பும் சொல்லியிருக்கிறேன், இப்போதும் சொல்கிறேன்: என்னை வேட்பாளராக நிறுத்துமாறு எந்த அரசியல் கட்சியையும் கேட்டுக்கொள்ள மாட்டேன்”.

உடல்நலக்கோளாறு காரணமாக கித்தா கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள ஜைட் எதிர்வரும் தேர்தலில் பெக்கானில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் போட்டியிடவில்லை என்றால் பக்காத்தான் ரக்யாட் வேட்பாளராக தாம் அங்கு போட்டியிட விரும்புவதாகக் கூறியிருந்தார்.

ஆனால், அச்செய்தி குறித்து  பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வியப்பு தெரிவித்தார். அப்படி ஓர் எண்ணம் இருந்தால் ஜைட் தம் எண்ணத்தைப் பக்காத்தானுக்கு இன்னும் முறைப்படி தெரியப்படுத்தவில்லை என்றார்.

ஜைட் தம் வலைப்பதிவில், கித்தா கட்சி “சிறியது, புதியது” என்பதால் ஒரு நம்பகமான தளத்தை அதனால் உருவாக்கிக் கொடுக்க இயலாது என்றார். ஆனாலும் மாற்றரசுக் கட்சிக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டும்  என்ற எண்ணம் தமக்கிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“ஹாடி பெக்கானில் போட்டியிட்டால் பல சிரமங்களை எதிர்நோக்குவார். எதற்கு அபாயமிக்க இடத்தில் அவரை நிறுத்த வேண்டும். அவர் பாஸ் தலைவராக இருக்கிறார். தேர்தலில் தோல்விகாணும் தலைவரைக் கொண்டிருப்பது பாஸுக்கு நல்லதல்ல.

“அப்படிப்பட்ட அபாயமான வேலையை அமைச்சராவதிலோ, தேசிய தலைவராவதிலோ நாட்டமில்லாத, நாடு சரியான திசையில் செல்ல வேண்டும் என்ற விருப்பதை மட்டுமே கொண்டுள்ள ஒருவர் மேற்கொள்ளலாம்”.

நஜிப்பை எதிர்க்க முடியும்

நாட்டின் முக்கிய விவகாரங்களில் நஜிப்பை எதிர்த்து வாதிடும் ஆற்றல் தமக்கு உண்டு என்று முன்னாள் அமைச்சரான ஜைட் கூறினார்.

“நான் பிரதமரை எதிர்த்துப் போட்டியிட விரும்புகிறேன், ஏனென்றால் மலேசியாவில் இன்று தப்பும் தவறுமாக உள்ள எல்லாவற்றின் பிரதிநிதியாகவும் அவர் உள்ளார். நாடு பிளவுபட்டுக் கிடக்கிறது, ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள், பரவலாக நிலவும் ஊழலும் அதிகார அத்துமீறல்களும் விரைவில் ஒழியும் என்பதற்கான அறிகுறியும் இல்லை.

“நஜிப் சில சீரமைப்புகளைச் செய்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்டி இருக்கிறேன். ஆனால், அது போதுமானதல்ல. அமைச்சரவையில் பொறுப்பற்ற சில அமைச்சர்கள் உள்ளனர். சில பிரச்னைகளுக்கு அவரிடம் தீர்வில்லை. இருந்தாலும், அவற்றைச் செயல்படுத்த அஞ்சுகிறார்”.

பார்டி கித்தாவில் இப்போது செயலவை உறுப்பினராக மட்டுமே இருக்கும் ஜைட், பக்காத்தான் தலைவர்கள் தம் எண்ணத்தை“குறுகிய கண்கொண்டு” நோக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

“அவர்கள் என்னுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள அஞ்ச வேண்டியதில்லை. நான் யாருக்கும் ஒரு மிரட்டல் அல்ல என்பதால் என்னைப் பற்றித் தப்பாக பேச வேண்டாம். நாட்டை மேலும் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்ல நாம் ஒன்றிணைய வேண்டும்”, என்றவர் கூறினார்.