சுவாராம் விசாரணையில் ஆர்ஒஎஸ் விசாரணையில் அழைப்பாணையை மூவர் மீறுவர்

மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராம் மீது நடத்தப்படும் விசாரணை தொடர்பில் ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அழைப்பாணை அனுப்பிய ஏழு மனித உரிமைப் போராளிகளில் மூவர் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு மறுத்துள்ளனர்.

பத்து எம்பி தியான் சுவா, மலேசிய சோஷலிசக் கட்சி தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன், எம்பவர் நிர்வாக இயக்குநர் மரியா சின் அப்துல்லா ஆகியோரே அவர்கள்.

தாங்கள் சுவாராம் அமைப்பை ஆதரித்த போதிலும் அதனுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றும் அதன் நடவடிக்கைகள் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 111வது பிரிவின் கீழ் அந்த நோட்ட்ஸை வெளியிடுவதற்கு ஆர்ஒஎஸ்-ஸுக்கு அதிகாரம் இல்லை என சுவா, மரியா, அருட்செல்வன் ஆகியோருக்காக வாதாடும் வழக்குரைஞர் எட்மண்ட் போன் தெரிவித்தார்.

“நாங்கள் அதனை வலியுறுத்தும் வகையில் ஆர்ஒஎஸ்-ஸுக்கு சட்ட நோட்டீஸ் ஒன்றை அனுப்புவோம்,” என போன் இன்று நிருபர்களிடம் கூறினார்.

அந்த நோட்டீஸை பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா-வும் புறக்கணிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவரை கோபிந்த் சிங் டியோ பிரதிநித்தார்.

அதிகாரிகள் ‘மீன் பிடிக்கும் படலத்தில் அல்லது பழி வாங்கும் படலத்தில்’ இறங்கியிருக்க வேண்டும் என்றார் அவர்.

“அவர்கள் முடியுமானால் சுவாராம் அல்லது Suara Inisiatif Sdn Bhd மீது குற்றம் சாட்டியிருக்க முடியும். ஆனால் அவர்கள் இது நாள் வரை அதனைச் செய்யவில்லை.”

மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத் தலைவர் லிம் சீ வா, மலேசிய வழக்குரைஞர் மன்ற அரசமைப்புக் குழு உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான், சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங் ஆகியோர் அந்த நோட்டீஸை பெற்றுள்ள மற்றவர்கள் ஆவர்.

 

TAGS: